states

பாஜகவிலுள்ள 70 விழுக்காடு வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள்

சென்னை, ஏப். 10 - தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்து, தமிழ்நாடு தேர்தல் கண்காணிப்பகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதன்படி 945 வேட்பாளர்களில் 135 வேட்பாளர்கள், அதாவது 15 விழுக்காட்டினர் தங்களுக்கு எதிராக குற்ற வழக்குகள் இருப்பதை தெரிவித்துள்ளார். இதில், 81 பேர் அதாவது 8 விழுக்காடு வேட்பாளர்கள் கடுமையான குற்ற வழக்குகள் உள்ளவர்கள். அந்த வகையில், பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் 70 விழுக்காட்டினர் குற்ற வழக்குகளை கொண்டவர்கள். அவர்களில் 39 விழுக்காட்டினர் மீது கடும் குற்ற வழக்குகள் உள்ளது. பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் நிறுத்தப்பட்டிருக்கும் வேட்பாளர்களில் 60 விழுக்காடு வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகளும் அவற்றில் 40 விழுக்காடு வேட்பாளர்கள் மீது கடும் குற்ற வழக்குகளும் உள்ளன. அதிமுக வேட்பாளர்களில் 35 விழுக்காட்டினர் மீது குற்ற வழக்குகளும், 18 விழுக்காட்டினர் மீது கடும் குற்ற வழக்குகளும் உள்ளன. நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களில் 28 விழுக்காட்டினர் மீது குற்ற வழக்குகளும், 15 விழுக்காட்டினர் மீது கடும் குற்ற வழக்குகளும் உள்ளனர். 202 கோடீஸ்வரர்கள் வேட்பாளர்களின் பொருளாதார பின்னணியை பொறுத்தவரை 945 பேரில், 202 பேர் அதாவது 21 விழுக்காட்டினர் கோடீஸ்வரர்கள். அதிமுகவின் 34 வேட்பாளர்களில் 33 பேரும், பாஜகவின் 23 வேட்பாளர்களில் 22 பேரும், திமுகவின் 22 வேட்பாளர்கள் 21 பேரும், நாம் தமிழர் கட்சியின் 39 வேட்பாளர்களில் 15 பேரும், காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் 9 பேரில் 8 பேரும், தேமுதிகவின் 5 வேட்பாளர்களில் 3 பேரும், சுயேச்சைகள் 606 பேரில் 62 பேரும் கோடீஸ்வரர்கள்.  7 சுயேட்சைகள் உட்பட 8 பேர் தங்களுக்கு எந்த வித சொத்தும் இல்லை என தெரிவித்துள்ளனர். 3 சுயேச்சைகள் குறைவான சொத்து உள்ளதாக தெரிவித்துள்ளனர். 48 விழுக்காடு பட்டதாரிகள் 945 வேட்பாளர்களில் 42 விழுக்காடு வேட்பாளர்கள் 5 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்தவர்களாகவும், 48 விழுக்காட்டினர் பட்டதாரிகளாகவும் உள்ளனர். மேலும், வேட்பாளர்களில் 25 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் 325 பேர். (மொத்த வேட்பாளர்களில் 34 விழுக்காடு). 41 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் 487 பேர் (52 விழுக்காடு). 61 முதல் 80 வயதுக்கு உட்பட்டவர்கள் 130 பேர். 945 வேட்பாளர்களில் 77 பேர் பெண் வேட்பாளர்கள் (8 விழுக்காடு).