தேர்தலில் பாஜக தோல்வி உறுதியாகியுள்ள நிலையில், பாஜகவுடன் கூட்டணியில் உள்ள கட்சிகள் மட்டுமல்ல; தனது சொந்த கட்சியின் வேட்பாளர்களே போட்டியிட மறுத்து ஓட்டம்பிடித்து வருகின்றனர். போட்டோ ஷாப்பில் குஜராத்தை கட்டி அமைத்து மாடல்…மாடல் என கூப்பாடு போடும் குஜராத் மாநிலத்தில் இருந்தும் பாஜக வேட்பாளர்கள் பின்னங்கால் பிடறியில் அடிபட ஓடியுள்ளனர். பாஜக சார்பில் வதோதரா தொகுதியில் ரஞ்சன் பட் எம்பி.,க்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் தான் போட்டியிடவில்லை என ஒதுங்கினார். சர்பகந்தா தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிகாஜி தாக்கூரும் ஐ எம் சாரி என ஓட்டம்பிடித்துவிட்டார். இதேபோன்று, இரட்டை இன்ஜின் ஆட்சி, புல்டோசர் மாடலை அறிமுகப்படுத்திய யோகியின் உத்தரப்பிரதேச மாநிலத்தில், ராமர் கோயில் கட்டப்பட்டதால், அது நாடு முழுவதும் எதிரொலிக்கும் என பாஜக நம்பிக்கை வைத்து, பெரும் பூஸ்ட் கொடுத்து பில்டப் செய்து வந்த நிலையில், அந்த உபியில் இருந்தே பாஜக வேட்பாளர்கள் ஐயோ சாமி எனக்கு சீட் வேண்டாம் என ஓடிய சம்பவம் நடந்துள்ளது. உபி பாரபங்கி நாடாளுமன்ற தொகுதிக்கு உபேந்திர சிங் ராவத் எம்பி., மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே அவரது ஆபாச வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து நான் போட்டியிடவில்லை என அறிவித்தார். கான்பூர் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் சத்யதேவ் பௌச்செரி எம்பி., காஜியாபாத் தொகுதியில் போட்டியிட்டு இணையமைச்சரான வி.கே.சிங் ஆகியோரும் தேர்தலில் போட்டியிடமாட்டோம் என பின்வாங்கியுள்ளனர். இதுதான் உபி, குஜராத் போன்ற மாநிலங்களில் உள்ள நிலை என்றால், மற்ற மாநிலங்களைச்சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. ஏற்கனவே கிழக்கு தில்லியில் போட்டியிட்டு தேர்வு செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் போட்டியிடமாட்டேன் என கம்பி நீட்டிய நிலையில், ஒன்றிய இணை அமைச்சராக இருந்த ஹர்சவர்த்தன், (சாந்தினி சவுக் தொகுதியில் வெற்றிபெற்றவர்) அரசியலில் இருந்தே விலகுகிறேன் என ஒதுங்கிக்கொண்டார்.
இதேபோன்றே, முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஹசாரிபாக் பாஜக எம்பி., ஜெயந்த் சின்ஹா, ராஜஸ்தானின் சுரு தொகுதி பாஜக எம்பி., ராகுல் கஸ்வான் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்ததுடன், தனது எம்பி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். கர்நாடகா சிக்கபல்லாப்பூர் தொகுதி பச்சேகவுடா என்கிற பாஜக எம்பி., அக்கட்சியில் இருந்தே விலகினார். மத்தியப் பிரதேச மாநிலங்களவை உறுப்பினர் பாஜகவைச் சேர்ந்த அஜய் பிரதாப் சிங்கும், அக்கட்சியில் இருந்து விலகினார். ஹரியானா மாநிலம் ஹிஸார் தொகுதி எம்.பியான பிரிஜேந்திர சிங் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். மேற்கு வங்க மாநிலம் ஜார்கிராம் தொகுதியின் பாஜக எம்பி., குனார் ஹெம்ப்ராம், அசன்சோல் பாஜக எம்பி பவன் சிங் என அடுத்தடுத்து தேர்தல் களம் காண தயாரில்லை என்பது மட்டுமல்ல; அரசியலில் இருந்தே விலகுவதாக அறிவித்து சென்றுவிட்டனர். இந்த பட்டியல் இதோடு நிற்காது தொடரும் என்பதே இப்போதைய நிலை. ஏன் பாஜக கூடாரம் காலியாகிறது என்கிற கேள்விக்கு, பத்தாண்டு பாஜக ஆட்சியில் தங்களின் புனிதர் வேடம் கலைந்தது என்பதே பதில். - அ.ர.பாபு