states

தொலைதூரக் கல்வியில் படித்தவர்களுக்கும் உதவிப் பேராசிரியர் பணி

சென்னை, ஏப்.27- தொலைதூரக் கல்வி மூலம் படித்து ஸ்லெட்,நெட் தேர்வுகளில் வென்றவர்களுக்கு உதவிப் பேராசிரியர் பணி வழங்கப்படுமா? என்ற கேள்விக்கு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பதிலளித்தார். வருங்காலங்களில் தமிழக அரசு அதற்கான ஏற்பாடுகளை நிச்சயமாக செய்யும் என்று அவர் கூறியுள்ளார். அப்போது, சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில்நாதன், கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு யுஜிசி விதிகளின்படி, ஸ்லெட், நெட் அல்லது பி.எச்டி படித்திருக்க வேண்டும் என்ற விதி இருக்கிறது. இதன்படி ஏழை மாணவர்கள் பலர் தொலைதூர வழியில் கல்வி கற்று, ஸ்லெட், நெட் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்களுக்குச் சென்றனர். இந்த நிலையில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு தொலைதூரக் கல்வி மூலம் படித்தது செல்லாது என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பளித்து. எனவே 2019-ம்  ஆண்டு உயர் நீதிமன்ற உத்தரவுக்கு முன்பாக தொலைதூரக்  கல்வி மூலம் படித்து ஸ்லெட், நெட் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு உதவிப் பேராசிரியர் பணியிடங்களை வழங்க அரசு முன்வருமா? என்றார். இதற்கு பதிலளித்த உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, “ஸ்லெட், நெட் தேர்வெல்லாம் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தொடர்புடையது. யுஜிசிக்குத்தான் பல்கலைக்கழகங்களைக் கட்டுப்படுத்தக்கூடிய அதிகாரம் எல்லாம் உள்ளது. அவர்கள்தான் ஸ்லெட், நெட் தேர்வெல்லாம் நடத்துகின்றனர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தற்போது தொலைதூரக் கல்வி நடந்துகொண்டிருக்கிறது. அதைகூட  நாங்கள் அங்கீகரிக்க மாட்டோம் என்று யுஜிசி அறிவித் திருக்கிறது. அங்கீகரிக்க வேண்டும் என்று தமிழக அரசு யுஜிசியிடம் கோரிக்கை வைத்துள்ளது.