states

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: மனு ஏற்கப்படாவிட்டால் அப்பீல் செய்யலாம்

சென்னை, செப். 4- தமிழகத்தில் குடும்பத் தலைவிக்கு  மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வரும்  செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப் படுகிறது. காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.  இத்திட்டத்துக்கு ரூ. 7 ஆயிரம் கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு முகாம்கள் இரண்டு கட்டங்களாகவும் மற்றும் விடுபட்டவர்களுக்கு சிறப்பு  முகாம்களும் தொடர்ந்து நடத்தப்பட்டு  ஆக. 20 அன்றுடன் விண்ணப்பங்கள் பதியும் பணி நிறைவடைந்தது. முதற்கட்ட முகாம்கள் ஜூலை 24ஆம் தேதி முதல் ஆக. 4ஆம் தேதி வரை நடைபெற்றது. இரண்டாம் கட்ட முகாம்கள் ஆக. 5ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நடைபெற்றது. பின்னர் வருவாய்த் துறையின் கீழ் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதி யம் பெறும் குடும்பங்களில் உள்ள  பெண்கள், இந்திரா காந்தி முதியோர்  ஓய்வூதிய தேசியத் திட்டம், முதல மைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம்,  அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியம் ஆகிய திட்டங்களில் முதி யோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்க ளில் உள்ள பெண்களும் மகளிர்  உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க லாம் என்று அரசு தெரிவித்தது. தொடர்ந்து விடுபட்டவர்களுக் கான சிறப்பு முகாம்கள் ஆகஸ்ட் 18, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டு மொத்தமாக 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைபேசி செயலி வழியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்படி முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் அளிக்கப்பட்ட தகவல்களை தேவையேற்படின் சரிபார்க்க கள ஆய்வு மேற்கொள்ளப் பட்டு வருகிறது. வரும் செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் இந்த அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு விண்ணப் பதாரர்களை இறுதி செய்ய அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் பின்னர் விண்ணப்பங்களின் நிலை குறித்து சம்பந்தப்பட்ட மகளிரின் கைபேசி எண்ணிற்கு குறுஞ் செய்தி அனுப்பி வைக்கப்படும். ஒருவேளை உரிமைத் தொகை நிராகரிக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தாலும், விண்ணப்பதாரர்கள், இது குறித்து மாவட்ட வருவாய் கோட்டாட் சியரிடம் மேல்முறையீடு செய்து தீர்வு  பெறலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.