கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி மறைவையடுத்து, புதுப்பள்ளி தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு செவ்வாயன்று (செப்.5) விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை முதலே வாக்குச் சாவடிகளில் கூட்டம் அலைமோதியது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இடது ஜனநாயக முன்னணி வேட்பாளர் ஜெய்க் சி.தாமஸ், மணற்காடு அரசு எல்பி பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார். பிற்பகல் 3 மணி வரை 57.8 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. உத்தரப்பிரதேசம், உத்தர்கண்ட், கேரளா, திரிபுரா, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் ஆகிய 6 மாநிலங்களில் உள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் செவ்வாயன்று நடைபெற்றன. இந்த ஆண்டு இறுதியில் நடக்கவிருக்கும் 5 மாநில சட்டமன்றத் தேர்தல்கள் மற்றும் 2024 மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள உள்ள நிலையில் இந்த இடைத்தேர்தல் முக்கியத்துவம் பெறுகின்றன. திரிபுராவில் உள்ள போக்ஸாநகர் மற்றும் தன்பூர் ஆகிய இரு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றன.