states

img

வளர்ச்சிக்கு ஒரு வாக்கு, சமூக நல்லிணக்கத்திற்கு ஒரு வாக்கு...கேரள உள்ளாட்சி தேர்தல் அறிக்கையில் எல்டிஎப் முழக்கம்

திருவனந்தபுரம்:
கேரள உள்ளாட்சித் தேர்தலுக்கான இடது ஜனநாயக முன்னணியின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு, 5லட்சம் வீடுகள், சமூக நல ஓய்வூதியம் ரூ.1500 போன்றவாக்குறுதிகளுடன் ‘வளர்ச்சிக்கு ஒரு வாக்கு, சமூக நல்லிணக்கத்திற்கு ஒரு வாக்கு’ என்ற வாசகத்தின் கீழ் இடதுசாரிகள் இந்தத் தேர்தலில் போட்டியிடுவார்கள். 

தேர்தல் அறிக்கையை திங்களன்று வெளியிட்ட எல்டிஎப் கன்வீனர் ஏ. விஜயராகவன் உள்ளிட்ட தலைவர்கள் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: 25 வருட அனுபவத்தின் அடிப்படையில் அதிகார பரவலாக்கலை மேலும் விரிவுபடுத்த வேண்டிய நேரம் இது. நிர்வாக மற்றும் நிதி சுயாட்சியை வலுப்படுத்த வேண்டும். மக்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும். அதை இன்னும் வெளிப்படையானதாக ஆக்க வேண்டும்.  வளர்ச்சியின் வேகத்தை துரிதப்படுத்த வேண்டும். இடது ஜனநாயக முன்னணி இந்த தேர்தலின் மூலம் இதற்கெல்லாம் மக்களிடம் அங்கீகாரம் கோருகிறது.

மக்கள் திட்டத்தின் வெள்ளி விழா கொண்டாடப்படும் நேரத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. 1996 ஆம் ஆண்டில் நாயனார் அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்ட மக்கள் திட்டமிடல் தான் கேரளாவில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு இணையற்ற அதிகாரம், அதிகாரப் பரவலில் முதலிடம் மற்றும் அதிகாரிகளையும் வழங்கியது. 1957 ஆம் ஆண்டில் இஎம்எஸ் அரசாங்கத்திலிருந்து பரவலாக்கத்திற்காக இடதுசாரிகள் எடுத்த நிலைப்பாட்டின் தொடர்ச்சியாக மக்கள் திட்டம் வகுக்கப்பட்டது.அதே நேரத்தில், உண்மையான பரவலாக்கத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் ஒரு பாரம்பரியத்தை யுடிஎப் கொண்டுள்ளது.கேரளாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மாவட்ட அளவிலான சபைகளை இழிவான முறையில் தகர்த்தது  இவற்றில் மிகவும் மோசமான நடவடிக்கை. இத்தகைய திசை திருப்பல்களை சமாளிப்பதற்காக, பரவலாக்கல் என்பது ஒரு ஆளுமையின் சீர்திருத்த வடிவமாக இல்லாமல் மக்கள் இயக்கமாக அறிமுகப்படுத்தப் பட்டது.இதன் விளைவாக, நாட்டில் அதிகார பரவலாக்கலில் கேரளா முதலிடம் பிடித்தது.

யுடிஎப் ஆட்சியின் முடிவில், 2015-16 ஆம் ஆண்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட்ட நேரடி நிதி உதவி ரூ.7679 கோடி.தற்போது இது ரூ.12074 கோடியாக அதிகரித்துள்ளது. இது தவிர, மத்திய நிதியுதவி திட்டங்கள், மாநில நிதியுதவி திட்டங்கள், முதலமைச்சரின் சாலை கட்டுமான திட்டம், குடும்பஸ்ரீ மற்றும் லைப் மிஷன் மூலம் குறைந்தது ரூ.10,000 கோடியை உள்ளாட்சி அமைப்புகள் பெற்றிருக்கின்றன. யுடிஎப் ஆட்சியின் போது  அந்தந்த ஆண்டுகளில் செலவிடப்படாத பணம் அடுத்த ஆண்டுக்குள் செலவிட அனுமதிக்கப்படவில்லை. தற்போது திட்ட செலவில் 30 சதவிகிதம் இவ்வாறு அனுமதிக்கப்படுகிறது.கோவிட்மூலம் இதர திட்டங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் எதுவும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு விதிக்கப்படவில்லை.கோவிட் பாதுகாப்புக்காக செலவிட்ட தொகையை கூடுதலாக வழங்குவதாகவும் உறுதியளிக்கப் பட்டுள்ளது.

காங்கிரஸ் மற்றும் பாஜக ஆட்சி செய்யும் அனைத்து மாநிலங்களிலும், அரசமைப்பின் 73-74 ஆவது திருத்தங்கள் மிகவும் பின்தங்கியுள்ளன.73-74 ஆவது திருத்தத்தின் 25 ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடிய ஒரே மாநிலம் கேரளமாகும். காங்கிரஸ் கூட அதை மறந்துவிட்டது.பாஜக மத்திய அரசு இந்த திட்டத்தை அடியோடு நிராகரித்தது.மேலும், பரவலாக்கப்பட்ட திட்டமிடல் என்று சொல்லத் தேவையில்லை.  மத்திய பஞ்சாயத்துத் துறை நிதியின்றி வறண்டு போய்விட்டது, என்று கூறலாம். நகர்ப்புற மேம்பாடு மற்றும் கிராமப்புறமேம்பாட்டுக்கான திட்டங்கள் இருந்தாலும், அவை செயல்படுத்துவதில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு முக்கிய பங்கு கொடுக்கப்படவில்லை.

வித்தியாசமான அனுபவம்
இவை அனைத்திலிருந்தும் கேரளா மிகவும் வித்தியாசமானது. கேரளாவில் இந்த கோவிட் தொற்றுநோயின் அனுபவம் உள்ளாட்சி அமைப்புகள் நாடு எதிர்கொள்ளும் சவால்களை எவ்வாறு வீரியத்துடன் எதிர்கொள்ள
முடியும் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று பாராட்டப்படுகிறது. இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் மக்களின் சமூக பாதுகாப்பு மற்றும் நலனில் ஒரு புதிய அத்தியாயத்தை படைத்துள்ளது.ஏழைகளின் நலனில் மட்டுமல்லாமல், குழந்தைகள் படிக்கும் பள்ளிகளிலும், சிகிச்சையை நம்பியுள்ள பொது மருத்துவமனைகளிலும் மக்கள் இந்த மாற்றத்தை ஏற்றுக் கொண்டனர். அரசுப் பள்ளிகளில் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதும், பொது சுகாதார மையங்களை நம்பியுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும் இதற்கு சான்றாகும். அதே நேரத்தில், விவசாயம் மற்றும் பாரம்பரிய துறைகள் போன்ற பொது மக்களின் வாழ்வாதாரங்கள் பாதுகாக்கப்பட்டன. படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க முதலீட்டை ஈர்ப்பதற்காக உட்கட்டமைப்பு வளர்ச்சியில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.கிப்பியை தொடாத ஒரு உள்ளாட்சிஅமைப்பும் இன்று கேரளாவில் இல்லை.

ஆனால் இன்று கேரளாவில் பாஜகவும் காங்கிரசும் கிப்பியை கவிழ்க்க ஒரு பெரிய சதியில் கூட்டு சேர்ந்துள்ளன. கேபிசிசி துணைத் தலைவர், கிப்பியை அரசமைப்பிற்கு முரணானதுஎன்று குற்றம் சாட்டி, சுதேசி ஜக்ரன் மன்ச் சார்பாக கிப்பிக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். உள்ளாட்சித் தேர்தல் இந்த நயவஞ்சகத்துக்கு எதிரான தீர்ப்பாக மாற வேண்டும்.நவீன தொழில்துறை சேவைகளின் முன்னேற்றத்தில் மையப்படுத்தப்பட்ட தலையீடு மற்றும் முதலீட்டை உறுதி செய்வதற்கும் சேவைகளை மேம்படுத்துவதற்கும் சிறு உற்பத்தித் துறைகள் புத்துயிர் பெறுவதற்கும் பரவலாக்கப்பட்ட திட்டமிடல் மற்றும் பொது பங்கேற்பை நாங்கள் அதிகம் பயன்படுத்துகிறோம். இதில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு முக்கிய பங்கு உண்டு. இடது ஜனநாயக முன்னணி மட்டுமே கேரளாவின் எதிர்காலம் குறித்த தெளிவான பார்வையையும் அதற்கேற்ப ஒரு நடைமுறை செயல் திட்டத்தையும் முன்வைக்கிறது.

பாஜகவின் திசை திருப்பும் முயற்சி
மதச்சார்பின்மை, கூட்டாட்சி அமைப்பு மற்றும் முற்போக்கான சித்தாந்தம் ஆகியவை கடுமையான சவால்களை எதிர்கொள்கின்றன.பாஜக அரசு ரூபாய் நோட்டுகளுக்கு விதித்த தடைநாட்டை ஒரு பேரழிவிற்குள் தள்ளியுள்ளது.இப்போது, ​​தொற்றுநோய் காட்டுத்தீ போல் பரவியுள்ளது.தொற்றுநோயைக் கையாள்வதில் மத்திய அரசின் செயலற்ற தன்மை பொருளாதாரத்தை ஒரு முழுமையான நிலைகுலைவுக்கு கொண்டு வந்துள்ளது.இன்று, இந்தியாவில் ஏற்பட்டுள்ளது உலகின் மிக மோசமான மந்தநிலையாகும். அனைத்து அரசமைப்பு நிறுவனங்களையும் பிற சட்ட நிறுவனங்களையும் பாஜக தனது எல்லைக்குள் கொண்டுவருகிறது.இவை அனைத்திலிருந்தும் பொதுமக்களின் கவனத்தைத் திசைதிருப்ப இனவாத பிளவுகளை உருவாக்க தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடுமையாக முயற்சித்து வருகிறது.தேசிய அளவில், சமரசம் இல்லாமல் இதை எதிர்க்க தன்னால்இயலாது என்பதை காங்கிரஸ் நிரூபித்துள்ளது.காங்கிரஸ் ஒரு தலைமை இல்லாத அவலத்தால் சீரழிந்துள்ளது.ஏராளமான காங்கிரஸ் தலைவர்கள் இந்துத்துவ கொள்கைக்கு ஆதரவாக உள்ளனர்.கேரளாவில் உள்ளாட்சி மன்றத் தேர்தலில், காங்கிரசின் சந்தர்ப்பவாத அரசியல் எஸ்டிபிஐ உள்ளிட்ட தீவிரவாத குழுக்களுடன் கூட்டணியாக வந்துள்ளது. இடது பகை அடிப்படையில் அதிகாரத்தைக் கைப்பற்ற காங்கிரஸ்-லீக் கூட்டணி பாஜக உட்பட அனைத்து வகையான வகுப்புவாத தீவிரவாத அமைப்புகளுடன் சந்தர்ப்பவாத கூட்டணியில் உள்ளது. இந்த சூழலில், பாதுகாப்புமிக்க கோட்டையாக கேரளா நிமிர்ந்து நிற்க வேண்டும். அனைத்து வகையான இனவாதத்திற்கும் எதிராக மதச்சார்பற்ற ஜனநாயக விழுமியங்களை நிலைநிறுத்தும் மாற்று வளர்ச்சித் திட்டத்தை இடதுசாரிகளால் மட்டுமே ஊக்குவிக்க முடியும்.அதனால்தான் இந்த உள்ளாட்சி அமைப்பின் தேர்தலில் இடது ஜனநாயக முன்னணியின் வெற்றி தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாக மாறி வருகிறது என எல்டிஎப் தலைவர்கள் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தனர்.

வாக்குறுதிகள்

&    வேளாண் துறையில் 5 லட்சம், வேளாண்மை அல்லா துறைகளில் 5 லட்சம், வேலை உறுதி திட்டத்தில் 3 லட்சம் வேலை வாய்ப்புகள்

&    60 வயதைக் கடந்த தகுதியுள்ள அனைவருக்கும் மாதம் ரூ.1500 ஓய்வூதியம்.

&    தோட்டம் தொழிலாளர்களின் வீட்டு வசதிக்கென சிறப்புத் திட்டம்.

&    அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு.

&    அனைத்து பொதுப் பள்ளிகளும் ஹைடெக் ஆக்கப்படும்.

&    சமூக சுகாதார மையங்கள் நவீனமயமாக்கப்படும்.

&    அனைத்து குடிமக்களின் சுகாதார தகவல் சேகரிக்கப்படும்.

&    அனைவருக்கும் சுகாதார காப்பீடு உறுதி செய்யப்படும்.

&    கோவிட் தடுப்பூசி எளிதில் கிடைக்க வழிவகை செய்யப்படும்.

&    மாற்றுத்திறனாளிகளுக்கு சமவாய்ப்பு உறுதி செய்யப்படும்.

&    முதியோர்களுக்கென தனியாக கிராமசபைக் கூட்டம் நடத்தப்படும்.

&    அங்கன்வாடிகளுக்கு செந்த கட்டடம் கட்டித்தரப்படும்.

&    நூலகங்கள் அனைத்தும் ஹைடெக் ஆக்கப்படும். 

&    விளையாட்டு திடல்கள் உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்கப்படும்.

&    நகராட்சிகளின் தூய்மைக்காக ரூ.2500 கோடியில் திட்டம்.

&    12,000 கழிப்பறைகளுடன் கூடிய ஓய்வறைகள் கட்டப்படும்.

&    இறைச்சிக் கூடங்களுக்கு கிப்பி நிதி வழங்கப்படும்.

&    கிராமச் சாலைகள் நவீனமயமாக்கப்படும்.

&    பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள் தடுக்கப்படும்.

&    குடும்பஸ்ரீ உறுப்பினர்களின் எண்ணிக்கை 50 லட்சமாக உயர்த்தப்படும்.

&    குடும்பஸ்ரீ பட்ஜெட் ரூ.500 கோடியாக உயர்த்தப்படும்.

&    குடும்பஸ்ரீ மூலம் 10 லட்சம் பேருக்கு மடிக்கணினி வழங்கப்படும்.

&    குடும்பஸ்ரீ கடன்கள் ரூ.15 ஆயிரம் கோடி வழங்கப்படும்

&    மூன்றாம் பாலினத்தோருக்கு சமவாய்ப்பு அளிக்கப்படும். 

&    உள்ளாட்சியில் சமூக தணிக்கை வலுப்படுத்தப்படும்.

&    சாலை உள்ளிட்ட பொது சொத்து பதிவேடு தயாரிக்கப்படும்.

&    பிடிஏ, எஸ்எம்சி, மருத்துவமனை, மேம்பாட்டுக்குழு போன்றவை வலுப்படுத்தப்படும்.

&    சான்றிதழ்கள் அனைத்தும் ஆன்லைனில் எளிதில் கிடைக்கும்.

&    வெளிநாடுகளில் வசிப்போர் வளர்ச்சியின் பகுதியாக இணைக்கப்படுவர்.

;