கேரளம் தற்போது கட்டுப் பாட்டை இழந்த வினோத மான ஓர் ஆளுநரின் நட வடிக்கைகளைப் பார்த்துக்கொண்டிருக் கிறது. ஒருநாள் அவர் கேரளப் பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறினார். மற்றொரு நாள் அவர் அர சாங்கத்தில் உள்ள ஓர் அமைச்சர் மீதான ‘‘விருப்பத்தைத் திரும்பப் பெறுவதாக’’ (‘‘withdraws pleasure’’) கூறி, அவரை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என்று முதல்வரிடம் கேட்டார். ஏபிஜே அப்துல் கலாம் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் நியமனத்தைத் தள்ளுபடி செய்து உச்சநீதி மன்றம் அளித்தத் தீர்ப்பைப் பயன் படுத்திக்கொண்டு, அப்பல்கலைக்கழ கத்தின் வேந்தராகப் பொறுப்பேற்ற கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், அக்டோபர் 25 அன்று காலை 11.30 மணியளவில் மாநிலத்தில் உள்ள ஒன்பது பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களையும் ராஜினாமா செய்யமாறு மிரட்டல் விடுத்தார். இவ்வாறு அவர் ‘உத்தரவிட்ட’ கடிதம் அக்டோபர் 24 அன்றே அனுப்பப்பட்டது.
எட்டு துணை வேந்தர்கள் ராஜினாமா செய்ய மறுத்து, ஆளுநரின் நடவடிக்கை க்கு எதிராக உயர்நீதிமன்றத்திற்குச் சென்றார்கள். ஒன்பதாவது துணை வேந்தர்தான் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் நீக்கப்பட்டவராவார். அவர்கள் அளித்திட்ட மனுக்கள் நீதிமன்றத்தில் விசா ரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்குச் சற்று முன்பு, ஆளுநர் தன் நிலையி லிருந்து பின்வாங்கிக் கொண்டு, அனைத்துத் துணை வேந்தர்களுக்கும் ‘நியமன நடைமுறையில் முறைகேடுகள் செய்தமைக்காக தங்களுடைய பதவி களிலிருந்து ஏன் வேலைநீக்கம் செய்யப்படக் கூடாது என்பதற்கு நவம்பர் 3-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டு காரணம் கோரும் அறி விப்பை அனுப்பினார். பின்னர், இதே போன்று காரணம் கோரும் அறிவிப்பை மேலும் இரு துணை வேந்தர்களுக்கு அனுப்பி இருக்கிறார். ஆளுநரின் இந்நடவடிக்கை சமீபத்தியில் அவர் மேற்கொண்ட பல அருவருப்பான நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகும். முன்னதாக, ஆளுநர், கண்ணூர் பல்கலைக் கழகத் துணை வேந்தர் மறுநியமனத்தின்போது அவரு டைய நியமன உத்தரவில் கையெழுத்திட்ட பின், அவர் மறுநியமனத்தைக் கேள்விக்கு உள்ளாக்கினார். இந்த நியமனத்திற்கு எதிராக கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டபோது இந்நியமனத்தை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.
முற்றிலும் சட்ட விரோதமானது
மிகவும் சமீபத்தில் ஆளுநர், கேரளப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் மற்றும் அதன் செனட்டிற்கு எதிராகவும் ஒரு போர் போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டார். காலியாக இருக்கும் துணை வேந்தர் பதவிக்கு ஒருவரைத் தேர்வு செய்திட இருந்து வந்த தேர்வுக்குழுவின் விதிமுறை கள் சம்பந்தமாக உள்ள சட்டத்தின் ஷரத்துக்களையெல்லாம் ஓரங்கட்டி வைத்திட வேண்டும் என்று கூறினார். இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளை செனட் எதிர்த்தபோது, செனட்டில் இருந்த 15 பேர் செனட் உறுப்பினர்கள், பொறுப்பிலிருந்து தான்தோன்றித்தனமாக நீக்கம் செய்யப்பட்டனர். இப்போதைய துணை வேந்தர்களுக்கு எதிராக ஆளுநர் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கை, அவர் இந்தப் பல்கலைக் கழகங்களின் ‘வேந்தர்’ என்ற முறையில் என்பது குறித்துக்கொள்ளப்பட வேண்டியதாகும்.
இந்தப் பல்கலைக் கழகங்கள் சம்பந்தமாக உள்ள சட்டங்களின்கீழ், வேந்தர் எந்தவொரு நபரையும் துணை வேந்தர் பதவியிலிருந்து தனது விருப்பப்படி நீக்க முடியாது. உதாரண மாக, இந்தப் பல்கலைக் கழகங்களின் சட்டங்களின்கீழ், ஒரு துணை வேந்தர் நிதி மோசடி அல்லது தவறான நடவடிக்கையில் ஈடுபட்டால் அவருக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதிக்கிறது. இதுபோன்ற குற்றச் சாட்டுகளின் மீது உயர்நீதிமன்ற நீதிபதி யால் விசாரணை நடத்தப்பட வேண்டும். எனவே, ஆளுநர், துணை வேந்தர்களை டிஸ்மிஸ் செய்திடுவேன் என்று மிரட்டுவ தெல்லாம் சட்டவிரோதமாகும்; பல்கலைக் கழகங்கள் தொடர்பான சட்டங்களுக்கு எதிரானதாகும். ஏபிஜே அப்துல் கலாம் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில் ஒரு குறிப்பிட்ட நியமனம் சம்பந்தமாக, அந்தப் பல்கலைக் கழகத்தில் எழுந்த புகாரின் மீதான வழக்கில் தான் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்தத் தீர்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, இதர அனைத்துப் பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களின் நியமனத்திற்கும் இந்தத் தீர்ப்பு பொருந்தும் என்று கூறி ஆளு நர் நடவடிக்கை எடுத்ததற்கு எவ்வித சட்ட அடிப்படையும் கிடையாது. பல்கலைக் கழகங்கள் சிலவற்றின் சட்டங்களின்படி, பல்கலைக் கழகங்களின் தேர்வுக்குழுக் களில் பல்கலைக்கழக மானியக் குழு சார்பில் ஒருவரும், பல்கலைக்கழகத்தின் சார்பில் ஒருவரும் இருப்பதோடு, மாநில அரசாங்கத்தின் சார்பில் ஒருவரும் நிய மிக்கப்படுகிறார். இதேமுறையைத்தான் மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா போன்ற வேறு சில மாநி லங்களும் பின்பற்றுகின்றன. தேர்வுக் குழுவில், மாநில அரசின் சார்பில் எவரும் இருக்கக்கூடாது என்கிற ஆளுநரின் நிலைப்பாடு ஏற்கத்தக்கதல்ல.
ஆளுநரின் உண்மை நோக்கம் என்ன?
கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் அவர்களுடைய நடவடிக்கைகளின் உண்மையான நோக்கம் என்ன? பல்கலைக் கழகங்களின் சுயாட்சியைப் பாதுகாக்கவும், ஆளும் கட்சியின் நபர்கள் துணை வேந்தர்களாகப் பொறுப் பேற்பதைத் தடுக்கவுமே நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டிருப்பதாக அவர் வாதிடு கிறார். இது, ஆர்எஸ்எஸ்/பாஜக-வின் நிகழ்ச்சிநிரலை முன்னெடுத்துச்செல்வ தற்காகவே மாநிலப் பல்கலைக் கழ கங்களில் தலையிட்டுக்கொண்டிருக்கிறார் என்பதை மூடிமறைப்பதற்கான பச்சோந்தித்தனமேயாகும்.
ஆளுநர்களின் அட்டூழியம்
பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்கிற தனது பதவியை ஆளுநர் கான் துஷ்பிரயோகம் செய்வது தனித்த ஒன்று அல்ல. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் பலவற்றில், ஆளுநர்கள் அந்தந்த மாநி லங்களில் உள்ள பல்கலைக்கழகங் களின் விவகாரங்களில் தலையிட்டுக் கொண்டிருக்கிறார்கள், துணை வேந்தர்கள் மற்றும் கேந்திரமான பொறுப்புகளில் நபர்கள் நியமனங்கள் செய்யப்படுவதில் தடைகளை உருவாக்கிக் கொண்டிருக் கிறார்கள். இதற்கு சமீபத்திய எடுத்துக் காட்டு, பஞ்சாப்பில் நடைபெற்றுள்ள சம்பவ மாகும். அங்கே ஆளுநராக இருக்கும் பன்வாரிலால் புரோகித், பாபா ஃபக்ரித் சுகாதார அறிவியல் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக புகழ்பெற்ற இதயநோய் நிபுணர் ஒருவர் நியமனம் செய்யப்பட்ட தை நிராகரித்திருக்கிறார். இதனைத் தொட ர்ந்து அவர், பஞ்சாப் வேளாண் பல்கலைக் கழகத் துணை வேந்தரின் நியமனமும் “சட்டவிரோதம்” என்று கூறி அவரையும் நீக்க வேண்டும் என்று முதலமைச்சரைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இவ்வாறாக ஆளுநர்கள், மாநிலங் களில் உள்ள பல்கலைக்கழகங்களில் தான் தோன்றித் தனமானமுறையில் தலையிடு வதைத் தடுத்துநிறுத்த வேண்டும் என்பதற்காக, தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் கேரள மாநிலங்களின் சட்டமன்றங் களால் மாநிலப் பல்கலைக்கழகங்கள் சம்பந்தப்பட்ட சட்டங்களில் திருத்தங்கள் அல்லது புதிய சட்டங்கள் நிறைவேற்றப் பட்டிருக்கின்றன. கேரளாவில், இந்த ஆண்டு செப்டம்பர் 1 அன்று பல்கலைக் கழக சட்டங்கள் (திருத்தச்) சட்டமுன்வடிவு (The University Laws (Amendment) Bill) நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்தத் திருத்தமானது, பல்கலைக் கழகத் துணை வேந்தர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்வுக்குழுவில் ஏற்கனவே 3 பேர் இருந்ததை 5 பேர் என அதிகரித்திருக்கிறது. ஆனாலும், இந்தச் சட்டமுன்வடிவுக்கு ஆளுநர் இன்னமும் ஒப்புதல் அளிக்கவும் இல்லை, அதனை விளக்கம் அல்லது ஆட்சேபனைகளைக் கோரி திருப்பி அனுப்பவும் இல்லை.
கேரள நிதியமைச்சருக்கு மிரட்டல்
ஆளுநரின் ஆட்சேபனைப் போக்கு குறித்து விமர்சனங்கள் எழும்போது, ஆளுநர் கான், தன்னை விமர்சனம் செய்திடும் எந்த அமைச்சரையும் தனக்கு “விருப்பம்” இல்லை எனக்கூறி விலக்கிடுவேன் என்று மிரட்டத்தொடங்கி இருக்கிறார். இப்போது அவர், நிதி அமைச்சர், கே.என். பாலகோபாலை, தனக்கு “விருப்பம்” இல்லாத அமைச் சர் என அறிவித்து, அமைச்சரவையி லிருந்து அவரை நீக்க வேண்டும் என முதலமைச்சரைக் கேட்டுக்கொண்டிருக் கிறார். இவ்வாறு, அவர் அரசமைப்புச் சட்டத்தின்கீழ் அவருக்கு அளிக்கப்படாத அதிகாரங்களைப் பிரயோகிக்கத் தொடங்கி இருக்கிறார்.
ஆளுநர்களை ‘வேந்தராக’ கருதத் தேவையில்லை
துணை வேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர்கள் தலையிடுவதைத் தடுத்து நிறுத்துவதற்கான தீர்வு, பல்கலைக் கழகங்களின் வேந்தர்களாக அம்மாநி லத்தில் உள்ள ஆளுநர்களைக் கருதும் போக்கை நிறுத்துவதேயாகும். ஐமுகூ அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட மத்திய-மாநில உறவுகள் மீதான எம்.எம்.புஞ்ச்சி ஆணையத்தின் பரிந்துரை இவ்வாறுதான் கூறுகிறது. இந்த ஆணையமானது, ஆளுநர்களைப் பல்கலைக் கழகங்களின் வேந்தர்களாகக் கருதும் வழக்கத்திற்கு (convention) முடிவு கட்ட வேண்டும் என்று பரிந்திரைத்திருந்தது. கேரளாவில் உள்ள உயர் கல்வி நிறு வனங்களில் ஆளுநர் தலையிடுவதற்கு எதிரான போராட்டம் முக்கியமானதாகும். ஆளுநர் என்ன செய்துகொண்டிருப்பது, நாட்டில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிநிரலைத் திணிக்க ஒன்றிய அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகளின் ஒரு பகுதியேயாகும். ஆளுநரின் தான்தோன்றித்தனமான நட வடிக்கைகள் சட்டரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் எதிர்த்து முறியடிக்கப் படும். கேரள இடது ஜனநாயக முன்னணி, வரும் நவம்பர் 15 அன்று இந்த விஷயம் தொடர்பாக ஆளுநர் மாளிகை நோக்கி மக்கள் பேரணியை நடத்துவது என்றும், அப்போது கேரளாவில் உயர்கல்வி அமைப்புமுறையின் மதச்சார்பற்ற ஜன நாயகப் பண்பினை அடித்துவீழ்த்திட இவர்கள் செய்திடும் சூழ்ச்சிகள் அனைத்தும் மக்கள் மத்தியில் தோலுரித்துக் காட்டப்படக்கூடிய விதத்தில் பிரச்சாரம் முடுக்கிவிடப்பட வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்திருக்கிறது.
அக்டோபர் 26, 2022, தமிழில்: ச.வீரமணி