states

img

இந்துஸ்தான் நியூஸ்பிரிண்ட் லிமிடெட் நிறுவனம்: கைவிட்ட ஒன்றிய அரசு; நடத்தி காட்டிய கேரள அரசு

ஒன்றிய பாஜக அரசு நடத்த இயலவில்லை என கைவிட்ட இந்துஸ்தான் நியூஸ்பிரிண்ட் லிமிடெட் நிறுவனத்தை, கேரள அரசு கையகப்படுத்தி, கேரள பேப்பர் புராடக்ட்ஸ் லிமிடெட் ஆக ஜனவரி 1 முதல் செயல்பட தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கேரள தொழில்துறை அமைச்சர் பி.ராஜூவ் கூறுகையில்,

மாநில அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள இந்நிறுவனம் 46 மாதங்களில் நான்கு கட்டங்களில் முழு அளவிலான செயல்பாட்டுக்கு வரும் போது 3000-க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வழங்கு முடியும் என கூறினார்.

தொழில்துறை செயலாளர் ஏ.பி.எம் முகமது ஹனிஷ், கேரள தொழில்துறை உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிர்வாக இயக்குனர் சந்தோஷ் கோஷி ஜேக்கப், சிறப்பு அதிகாரி பிரசாத் பாலகிருஷ்ணன் ஆகிய 3 பேர் அடங்கிய குழு அதன் செயல்பாடுகளை வழி நடத்துவார்கள்.அடுத்த ஆண்டு மே மாதம் பினராயி விஜயன் முறையாக இந்த பிரிவை திறந்து வைக்க உள்ளார் என்றார்.

 

தொழிற்சாலையை நவீனப்படுத்த 34.3 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது கட்டத்தில் 44.9 கோடி செலவில் மூன்று முதல் ஆறு மாதங்களில் உற்பத்தி தொடங்கும்.மேலும் இதற்கு 75.15 கோடி செயல்பாட்டு மூலதனம் தேவைப்படுகிறது என்றார்.

அமைச்சரின் கூற்றுப்படி, முதல் சில மாதங்களுக்கு தொழிற்சாலை அதன் செயல்பாடுகளை சோதனை அடிப்படையில் இயக்கும்.

உற்பத்தியை மீண்டும் தொடங்கும்போது நிறுவனம் பெரும்பாலும் இறக்குமதி செய்யப்பட்ட கூழ்களைப் பயன்படுத்தும்.மூன்றாவது கட்டத்திற்கு 650 கோடி முதலீடு தேவைப்படும்.மேலும், ஒன்பது மாதங்களில் நிறுவனம் குறிப்பிடத்தக்க லாபத்தை காணும் போது, நிறுவனத்தின் சொந்த அமைப்பு மூலமாகவும், வங்கிகளின் ஆதரவுடனும் நிதி திரட்டப்படும் என்று கூறிய ராஜீவ், 17 மாதங்களில் நான்காவது கட்டத்தில் 3.50 லட்சம் டன்கள் உற்பத்தி செய்து நிறுவனம் 350 கோடி மதிப்பிலான லாபத்தை ஈட்டும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது என்று கூறினார்.

செய்தித்தாள் மூலம் உற்பத்தி தொடங்கும் அதே வேளையில், அதன் அடுத்தடுத்த கட்டங்களில் டிஷ்யூ பேப்பர் உள்ளிட்ட பிரீமியம் பேப்பர் தயாரிப்புகளாக பன்முகப்படுத்தப்படும். இறுதிக்கட்டத்தில் 3200 கோடி வருவாய் ஈட்டி முன்னணி நிறுவனமாக மாறும் என கூறினார்.

 நிறுவனத்தை லாபகரமானதாக மாற்றுவதற்கு நிர்வாகத்திற்கு முழு பொறுப்பும், சுதந்திரமும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மாநில அரசு வழங்கிய 700 ஏக்கரில் முன்பு இருந்த மத்திய பொதுத்துறை நிறுவனம், நிதி இழப்பைக் காரணம் காட்டி அதன் உற்பத்தி ஆலையை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மூடியது. மேலும், நிறுவனத்தை தனியார்மயமாக்கும் திட்டத்தை ஒன்றிய அரசு கையில் எடுத்ததால், மாநில அரசே அதை கையகப்படுத்தி கேரள பேப்பர் புராடக்ட்ஸ் நிறுவனமாக செயல்படுத்த தொடங்கியிருக்கிறோம் என்றார்.

 

;