கொச்சி, டிச. 7-
‘வரதட்சணை கொடுத்தால் தான் திருமணம் செய்வோம் என்று சொல்பவர்களை இன்றைய பெண்கள் வேண்டாம்’ என சொல்ல வேண்டும் என்று முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.
திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி அறுவை சிகிச்சைத் துறை முதுநிலை இரண்டாம் ஆண்டு மாணவி வெஞ்ஞாரமூட்டைச் சேர்ந்த டாக்டர். ஷஹானாவின் தற்கொலை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
‘வரதட்சணை கேட்கவோ வாங்கவோ கூடாது என்ற பொது விழிப்புணர்வு சமூகத்தில் இருக்க வேண்டும். ஒட்டு மொத்த சமூகத்திலும் சீர்திருத்தம் தேவை என்றும், இதுபோன்ற விசயங்களுக்கு சமூகமும் பொறுப்பு’ என்று முதல்வர் கூறினார்.
டாக்டர் ஷஹானா மரணத்திற்கு காரணமான சக மருத்துவ மாணவர்இ.ஏ.ருவைஸ் அதிக வரதட்சணைக்காக வற்புறுத்தியதாக வும், வரதட்சணை காரணமாக திருமணத்திலிருந்து பின்வாங்கியதால், தனது சகோதரி மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் ஜாசிம் கூறினார். இது குறித்து விசாரித்த காவல்துறையினர் ருவைஸை வியாழனன்று (டிச.7) கைது செய்தனர்.ஷஹானாவுடன் காதல் கொண்ட ருவைஸ் திருமணம் செய்ய வரதட்சணையாக 150 பவுன் நகை, 15 ஏக்கர் நிலம், பிஎம்டபிள்யூ கார் ஆகியவற்றைக் கேட்டதுவே தற்கொலைக்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது.