states

img

3 ஆண்டுக்கு முன்னரே மதுவிலக்கு கொள்கையை சூறையாடிய குஜராத் பாஜக அரசு

1960 மே 1-ஆம் தேதி குஜராத் மாநிலம் உருவானது. மகாத்மா காந்தி பிறந்த மண் (மாநிலம்) என்ற சிறப்பிற்காக குஜராத் மாநிலம் உருவான தினத்தில் இருந்து அப்போது ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு மதுவிலக்கு கொள்கையை அறிவித்தது. கிட்டத்தட்ட 63 ஆண்டுகாலமாக குஜராத் மாநிலத்தில் மதுவிலக்கு கொள்கை அமலில் இருந்த நிலையில், கடந்த வாரம் காந்திநகரில் உள்ள கிப்ட் சிட்டியில் உலகளாவிய வணிக சூழலை வழங்கும் முயற்சியாக மதுவிருந்துக்கு அனுமதி அளிப்பதாக கூறி அந்த பகுதிக்கு மட்டும் மதுவிலக்கு கொள்கையை நீக்கியது குஜராத் பாஜக அரசு.  குஜராத் அரசின் இந்த அறிவிப்புக்கு அம்மாநில மக்கள், “இந்தியா” கூட்டணிக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், 3 ஆண்டுகளுக்கு முன்னரே மதுவிலக்கு கொள்கையை குஜராத் பாஜக அரசு சூறையாடியதாக அம்மாநில கலால் துறை தற்போது போட்டுடைத்துள்ளது. 58 சதவீதம்... குஜராத் மாநிலத்தில் உடல்நிலையை காரணம் காட்டி மது அருந்த அனுமதி பெற்றுள்ளவர்கள் எண்ணிக்கை, கடந்த மூன்று ஆண்டுகளில் 58 சதவீதம் உயர்ந்து உள்ளதாக அம்மாநில கலால் துறை தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக  கலால் துறை வெளியிட்ட குறிப்பில்,”2020 நவம்பரில் 27,452 பேர் மது அருந்த அனுமதி பெற்றிருந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை 43,470 பேராக அதிகரித்து உள்ளது. மேலும் குஜராத்தில் மது குடிக்க அனுமதி பெற்றவர்களுக்கும், நாட்டின் பிற பகுதிகள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வருவோருக்கும் மதுபானம் விற்க 77 ஹோட்டல்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது என்ற விஷயமும்  கசிந்துள்ளது.  மது அருந்த சிறப்பு அனுமதி மூலம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னரே காந்தி பிறந்த மண்ணான குஜராத் மதுவிலக்கு கொள்கைக்கான சிறப்பை இழந்துவிட்டது என்பது தற்போதுதான் தெரியவந்துள்ளது.