states

img

பாலியல் வன்கொடுமை: பிரஜ்வல் ரேவண்ணா மீது புதிதாக 25-க்கும் மேற்பட்ட பெண்கள் புகார்

கர்நாடகா பாஜக கூட்டணி வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா மீது புதிதாக 25க்கும் மேற்பட்ட பெண்கள் புகார் அளித்துள்ளனர்.

கர்நாடக மாநிலம், ஹாசன் தொகுதி எம்பி பிரஜ்வல் ரேவண்ணா, 300க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், அதை 3000க்கும் மேற்பட்ட காணொளியாக பதிவு செய்துள்ளதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகாரின் பேரில் ஹொளே நரசிப்புரா காவல் நிலையத்தில் பிரஜ்வல் ரேவண்ணா, அவரது தந்தையும் முன்னாள் அமைச்சருமான எச்.டி.ரேவண்ணா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த வழக்கை சிறப்புப் புலனாய்வு பிரிவு(எஸ்.ஐ.டி) விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், ரேவண்ணா மீது பாதிக்கப்பட்ட இரு பெண்கள் அளித்துள்ள புகார்களின் அடிப்படையில் 2 வழக்கு பதியப்பட்டுள்ளன.

அதில் 44 வயதான பாதிக்கப்பட்ட பெண் அளித்துள்ள புகாரில், ரேவண்ணாவின் எம்பி மாளிகையில் வைத்து, தான் துப்பாக்கி முனையில் மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக அவர் கூறியிருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரேவண்ணாவால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ள 40 வயதைக் கடந்த இரு பெண்களையும், சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படும் ரேவண்ணாவின் இல்லத்துக்கே அழைத்துச் சென்று, சிறப்பு விசாரணைக் குழு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நீதிமன்றக் காவலில் உள்ள ரேவண்ணாவிடம், சிறப்பு விசாரணைக் குழு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரேவண்ணாவால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டுள்ள மேலும் 25க்கும் மேற்பட்ட பெண்கள் கண்டறியப்பட்டு, அவர்களிடம் முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் ரேவண்ணாவால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்கள் பலர், ரேவண்ணா மீது புகாரளிக்க முன் வந்திருப்பதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

;