உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் நடைபெற்ற தர்ம சன்சத் நிகழ்ச்சியின்போது சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க ஐந்து பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை (எஸ்ஐடி) உத்தரகண்ட் காவல்துறை அமைத்துள்ளது.
இக்குழு தொடர்பாக பேசியுள்ள கர்வால் மண்டல துணை ஆய்வாளர் (டிஐஜி) கரண் சிங் நக்னால், ஹரித்வாரில் நடந்த தர்ம சன்சத் வெறுப்பு பேச்சு தொடர்பான வழக்கை விசாரிக்க காவல் கண்காணிப்பாளர் கீழ் ஐந்து பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
முன்னதாக, இந்துத்துவ தலைவர்கள் யதி நரசிம்மானந்த் சரஸ்வதி மற்றும் சாகர் சிந்துராஜ் ஆகியோரின் பெயர்களையும் இவ்வழக்கில் ஹரித்வார் காவல்துறை இணைத்துள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள உத்தரகண்ட் காவல்துறை இயக்குனர் அசோக்குமார், சர்ச்சைக்குள்ளான அக்காணொளியின் அடிப்படையில், தர்ம சன்சத் வெறுப்பு பேச்சு வழக்கில் சாகர் சிந்து மகராஜ் மற்றும் யதி நரசிங்கான்ந்த் சரஸ்வதி ஆகிய இருவரின் பெயர்கள் முதல் தகவல் அறிக்கையில் இணைக்கப்பட்டுள்ளன.மேலும், சட்டப்பிரிவு 295-ஏயும் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
யதி நரசிங்கானந்த் சரஸ்வதி மீது உபா சட்டம் பதியப்பட வேண்டும் என்றும் கடுமையான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்தன. சிறுபான்மையினரை அச்சுறுத்தியதாக அவர் மீது ஏற்கனவே பலவேறு வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.