கருத்தரங்கின் நோக்கத்தை விளக்கிய பேரா.ஆத்ரேயா “2014ல் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு கடுமையான தொழில், வேளாண் நெருக்கடி, கிராமப்புற நெருக்கடி நிலவுகிறது. வேலையின்மை அதிகரித்துள்ளது. ஊழலின் ஊற்றுக் கண்ணாக உள்ள கார்ப்பரேட்-இந்துத்துவா மோடி ஆட்சியில் மக்கள் எண்ணற்ற துன்பங்களை சந்திக்கின்றனர். கார்ப்பரேட் - இந்துத்துவாவை இணைக்கிற புள்ளியாக அதானி-மோடி உறவு உள்ளது. பெருமுதலாளிகளுக்கு சேவை செய்வதே அரசின் நோக்கமாக உள்ளது. அதானி, அம்பானி, டாடா போன்ற பெருமுதலாளிகளும் இந்துத்துவா கொள்கையை ஏற்றுக் கொண்டு அரசுக்கு ஆதரவு தருகின்றனர்” என்றார்.
அதானி குழுமத்தின் வரலாறு, மோசடி, விஸ்வரூப வளர்ச்சி போன்ற வற்றை பட்டியலிட்ட ஆத்ரேயா, “2002 குஜராத் கலவரத்திற்கு பிறகு தனிமைப்பட்ட இந்துத்துவா ஊழியரான மோடியை பாதுகாத்து, பிரதமராக்கியதில் அதானிக்கு பெரிய பங்குண்டு. அதானி - மோடிக்கு இருப்பது நீண்டகால ஊழல் உறவு. இதற்கு கைமாறாக, விமான நிலையங்கள், துறைமுகங்கள், சுரங்கங்கள், மின்உற்பத்தி, பாதுகாப்புதுறை, தானிய கிடங்குகள் என இந்திய நாட்டின் கேந்திரமான அனைத்தும் அதானியிடம் கொடுக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்ட அவர், “தற்போது, இஸ்ரேலில் உள்ள ஹைபா துறைமுகத்தின் மீது அதானி குழுமம் கண் வைத்துள்ளது. அதற்காகவும், ஹமாஸ் தாக்குதல் நடத்தியவுடன் இஸ்ரேலை பிரதமர் ஆதரிக்கிறார்” என்பதை சுட்டிக்காட்டினார்.
“அதானி முறைகேடுகளை விசாரிக்க எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை கோருகின்றன. ஆனால், அரசு மறுத்து வருகிறது. இந்த பின்புலத்தில், தற்போது சிஏஜி மூலம் 7 ஊழல்கள் வெளிவந்துள்ளன. ஒன்றிய அரசின் மக்கள் விரோத, பெரும் கார்ப்பரேட் ஆதரவான, இந்துத்துவா மதவெறி அரசியலை மக்களின் போராட்டங்களின் வாயிலாகவே முறியடிக்க முடியும்” என்றும் அவர் கூறினார்.