மேற்கு வங்க மாநிலம் பாருய்பூரில், கடந்த 10 நாட்களில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு இருந்த 4 இஸ்லாமியர்கள் மரணமடைந்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலத்தில், பாருய்பூரில் கடந்த 10 நாட்களில் வெவ்வேறு மோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருந்த ஜியால் லஸ்கர் (35 வயது), அப்துல் ரஜாக் (34 வயது), அக்பர் கான் மற்றும் சைதுல் முன்சி (33 வயது) என்ற நான்கு இஸ்லாமியர்கள் அடுத்தடுத்து மரணமடைந்திருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நான்கு பேரையும், கடந்த ஜூலை மாதம் இறுதியில் மேற்கு வங்க போலீசார் கைது செய்துள்ளனர். மரணம் குறித்து போலீசாரிடம் விசாரித்த போது, இந்த மரணங்கள் தற்செயலாக நடந்தது என்று பதிலளித்துள்ளனர். மேலும், உடற்கூறு ஆய்வு குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
இது குறித்து, ’தி வயர்’ செய்தி தளத்திற்கு இறந்தவர்களின் குடும்பத்தினர் அளித்த பேட்டியில், காவலில் வைக்கப்பட்டவர்கள் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்தது, தங்களுக்கு சந்தேகம் அளிக்கிறது என்றும், இறந்தவர்களின் உடலில் கடுமையாக தாக்கப்பட்டதால் ஏற்படும் காயங்கள் காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.