உத்தரகண்ட்டில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் உருவான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 54 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது.
முக்கியமாக சாமோலி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தொடர் கனமழை பெய்து வருவதால் பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் 7 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் தற்போது வரை 54 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 11 பேர் மாயமாகி உள்ளனர். காணாமல் போனவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.