states

img

திரிபுராவில் பாஜகவின் இந்த கொலைவெறி ஏன்?

அகர்தலா:
திரிபுராவில் ஆளும் பாசிச பா.ஜ.க. கொலைவெறி ஆட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சி மீது கட்டவிழ்த்துவிட்டுள்ளது. ஏராளமான கட்சி அலுவலகங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. கட்சியின் மாநிலக் குழு அலுவலகமும் கட்சியின் பத்திரிக்கையான “தேசர் கதா” அலுவலகமும் இதில் தப்பவில்லை. கட்சி தோழர்கள்மீது குண்டர்கள் வன்முறையை ஏவிவிட்டுள்ளனர்.

2018ம் ஆண்டு சிறு வாக்கு வித்தியாசத்தில்ஆட்சிக்கு வந்த பா.ஜ.க. அரசாங்கம் தனது எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதிய குழுவின்பரிந்துரைகள் அமலாக்கப்படும் என பா.ஜ.க.வாக்குறுதி அளித்தது. இடது முன்னணியின்ஆதரவாளர்களாக இருந்த அரசு ஊழியர்கள்ஒரு பகுதியினர் பா.ஜ.க.வுக்கு வாக்களித்த தற்கு இது ஒரு காரணம். இன்று வரை இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்பது மட்டுமல்ல; தங்களது ஆட்சி சிறப்பான திட்டங்
களை உருவாக்கியுள்ளதாகவும் ஆனால் அரசுஊழியர்கள் அவற்றை அமலாக்க மறுக்கின்றனர் எனவும் பா.ஜ.க.அமைச்சர்கள் பொய் சொல்ல ஆரம்பித்துள்ளனர். மக்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் முரண்பாடுகளை உருவாக்க முயல்கின்றனர். சில அமைச்சர்கள் அரசுஊழியர்களின் எலும்புகளை அடித்து நொறுக்கவேண்டும் எனவும் பகிரங்கமாக மிரட்டல் விடுத்தனர். இதன் காரணமாக அரசு ஊழியர்கள் பா.ஜ.க. அரசாங்கம் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு சட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே மிக அதிகநாட்கள் பணி கொடுத்தது மாணிக் சர்க்கார் தலைமையிலான அரசாங்கம்தான். ஆனால்இன்று அதில் கடும் சரிவு உருவாகியுள்ளது. இதன் விளைவாக பல கிராமப்புற உழைப்பாளிகள் அரசாங்கம் மீது கோபத்தில் உள்ளனர்.தாங்கள் ஆட்சிக்கு வந்தால் வைரத்தைப் போல மின்னும் சாலைகளை உருவாக்கு வோம் என வாக்குறுதி அளித்தனர் பா.ஜ.க.வினர். ஆனால் போடப்பட்ட சில நாட்களிலேயே மழை பெய்த பொழுது சாலைகள் சேறும் சகதியு மாக மாறின.

எங்கே எனது வேலை?
எல்லாவற்றுக்கும் மேலாக தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 50,000 வேலைகள் உருவாக்குவோம் என வாக்குறுதி அளித்தனர். 3 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. ஏற்கெனவே வேலையில் இருந்த சுமார் 10,000க்கும் அதிகமான ஒப்பந்த ஊழியர்களும்ஆசிரியர்களும் வேலை நீக்கம் செய்யப்பட்டனர். இது மாநிலத்தின் இளம் வயதினரிடையே கடும் ஏமாற்றத்தையும் கோபத்தையும் விளைவித்தது.மாநில அரசாங்கத்தின் செயலின்மையும் ஒன்றிய அரசாங்கத்தின் மக்கள் விரோத கொள்கைகளும் இணைந்து பா.ஜ.க.மீது மிகப்பெரிய அதிருப்தி மலைபோல உருவாகிக்கொண்டிருந்தது. இதன் விளைவாக பல இடங்களில் பா.ஜ.க.வினரும் அதன் கூட்டணி கட்சியான ஐபிஎப்டி-யிலிருந்தும் ஏராளமான ஆதரவாளர்கள் விலகி மார்க்சிஸ்ட் கட்சியில்இணையத் தொடங்கினர். கிழக்கு சோரிபுரி/தன்பூர்/தர்ம நகர்/ஃபல்பூரி ஆகிய பல இடங்களில் பா.ஜ.க. கூட்டணியின் ஊழியர்கள் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தனர். இது பா.ஜ.க. நிர்வாகிகளிடையே கடும் ஆத்திரத்தை உருவாக்கியது. 

இதனிடையே பா.ஜ.க.வுக்குள் விரிசல் உருவாக தொடங்கியது. ஏழு முக்கிய பா.ஜ.க.வின் சட்டமன்ற உறுப்பினர்கள் தில்லிக்கு சென்று அமித்ஷாவை சந்தித்து முதல்வர் பிப்ளவ் தேவை  மாற்ற வேண்டும் என வலியுறுத்தினர். அவர்களை கட்சியிலிருந்து விலக்க பிப்ளவ் தேவ் முயற்சிகள் எடுத்தார். மத்திய தலைமை கட்டப் பஞ்சாயத்து செய்துதற்காலிகமாக நெருக்கடியை தவிர்த்தது. எனினும் கோஷ்டி குழப்பங்கள் தொடர்கின்றன. சமீபத்தில் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் சுர்ஜித் தத் என்பவர் தனது உயிருக்கு ஆபத்து எனவும் உள்துறை அமைச்சர் அமித்ஷா பாதுகாப்பு தர வேண்டும் எனவும் மேடையிலேயே பகிரங்கமாக பேசினார்.

அரசு ஊழியர்கள் பிரச்சனை/ மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு/ ஆசிரியர்கள் பிரச்சனை/ வேலை வாய்ப்பு ஆகிய பிரச்சனைகளை முன்வைத்து மார்க்சிஸ்ட் கட்சியும் வாலிபர் சங்கம் உட்பட அனைத்து அமைப்புகளும் களத்தில் இறங்கி இயக்கம் கண்டன. மக்களிடையே இது மிகப்பெரிய பிரதிபலிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்திய “எங்கே எனது வேலை” எனும் இயக்கம் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியது. அகில இந்திய அளவில் மோடியின் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை எனும்பொய்யுடன் திரிபுராவில் பிப்ளவ் தேவ் தலைமையிலான அரசாங்கத்தின் 50,000 பேருக்கு வேலை எனும் பொய்யும் இணைந்துபா.ஜ.க.மீது மிகப்பெரிய அதிருப்தியை உருவாக்கியது.
ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு நகரிலும் “எனது வேலை எங்கே?” எனும் இயக்கம் பரந்த அளவில் நடைபெற்றது. ஆகஸ்ட் மாதம் முழுவதும் இந்த இயக்கம் இடைவிடாமல் தொடர்ச்சியாக நடந்தது. இந்த இயக்கம் உருவாக்கிய தாக்கம் காரணமாக பா.ஜ.க.வினர் கிலி அடைந்தனர். ஆத்திரம்கொண்டனர். பல இடங்களில் வாலிபர் சங்கம்மற்றும் கட்சி ஊழியர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. கட்சியின் தலைவர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டன. ரகு லோத் எனும் பா.ஜ.க. பிரமுகர் தோழர் மாணிக் சர்க்கார் அவர்களைக் கொன்று அவரது தோலை முழுவதும் உரிப்பேன் என பகிரங்க மிரட்டல் விடுத்தான். 20 ஆண்டு காலம் முதல்வராகவும் தற்போதைய எதிர்கட்சி தலைவராகவும் உள்ள மாணிக் சர்க்காருக்கு எதிராக பகிரங்க கொலை மிரட்டல் விடுத்தபொழுதும் காவல்துறையோ அல்லது பா.ஜ.க.அரசாங்கமோ கண்டு கொள்ளவில்லை.\

தடைகளை உடைத்த  சிபிஎம் ஊழியர்கள்
இந்த சூழலில் செப்டம்பர் முதல் வாரத்தில் அனைத்து வட்டங்களிலும் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கும் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சி அறிவித்தது. மனுகொடுக்கும் முன்பு மிகப்பெரிய பேரணிகளுக்கும் திட்டமிடப்பட்டன. இந்த பேரணிகள் பல இடங்களில் மகத்தான வெற்றி பெற்றன. இதுவும் பா.ஜ.க.வினருக்கும் கடும்  எரிச்சலை உருவாக்கியது.இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக செப்டம்பர் 6ம் தேதி மாணிக் சர்க்கார், தனது சொந்த தொகுதியான கத்தாலியாவுக்கு  மனு அளிக்கசென்றார். ஏற்கெனவே வழியில் இரண்டு இடங்களில் ஆயிரக்கணக்கான கட்சி ஊழியர்கள் மாணிக் சர்க்கார் வருகைக்காக காத்திருந்தனர். இந்த பேரணியை தடுக்கவும் சீர்குலைக்கவும் திட்டமிட்ட பா.ஜ.க. விஷமிகள் மூன்று இடங்களில் மாணிக் சர்க்காரை மேலே போகவிடாமல் தடுக்க முன்கூட்டியே திட்டமிட்டனர். பா.ஜ.க. விஷமிகளின் திட்டத்துக்கு காவல்துறையும் உடந்தை என்பதை கூறத்தேவை இல்லை. எப்பொழுதெல்லாம் மாணிக் சர்க்கார் பேரணியில் கலந்து கொள்ள வருகிறாரோ அப்பொழுதெல்லாம் காவல்துறையினர் சட்டம் - ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி அவரை தடுப்பது வழக்கமாக கொண்டிருந்த னர். இந்த முறையும் அவ்வாறே செய்தனர். கத்தாலியா செல்லும் வழியில் தன்பூர் எனும் இடத்தில் மாணிக் சர்க்காரின் வாகனம்காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது. சற்று தூரத்தில் பா.ஜ.க. விஷமிகள் டயர்களைஎரித்துக் கொண்டு பாதையை மறித்துநின்றனர்.அதனை சுட்டிக்காட்டிய காவல்துறையினர் சட்டம், ஒழுங்கு ஏற்படும் என்பதால் போகவேண்டாம் என மாணிக் சர்க்காரிடம் கூறினர். இந்த முறை மாணிக் சர்க்கார் காவல்துறையினரின் கூற்றை ஏற்றுக்கொள்ளவில்லை. தான் தனது சொந்த தொகுதிக்கு செல்வதாகவும் தன்னை பாதுகாப்பாக அழைத்து செல்லும் பொறுப்பு காவல்துறையிடம்தான் உள்ளது எனவும் வாதிட்டார். பா.ஜ.க. விஷமிகளை அகற்றுமாறும் வேண்டினார். காவல்துறையினர் அதற்கு தயாராக இல்லை. ஏனெனில் விஷமிகளுடன் கூட்டு சேர்ந்திருந்தனர். 

காவல்துறையினர் எவ்வித நடவடிக்கை யும் எடுக்க மாட்டார்கள் என்பதை தெரிந்து கொண்ட கட்சி தோழர்கள் காவல்துறையின் தடுப்புகளை தாண்டி முன்னேறினர். மாணிக்சர்க்காரும் அவர்களுடன் நடந்தார். ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வருவதை கண்டபா.ஜ.க. விஷமிகள் பின்வாங்கி ஓடினர். அடுத்து பஷ்புகூர் எனும் இடத்திலும் பல விஷமிகள் மாணிக் சர்க்காரின் பேரணியை தடுக்கவும் வன்முறையை ஏவவும் தயாராக இருந்தனர். அதற்குள் மேலும் பல கட்சி ஊழியர்கள் பேரணியில் இணைந்தனர். கட்சிதோழர்களின் பெரும் கூட்டத்தை கண்ட விஷமிகள் அங்கும் பின்வாங்கி ஓடினர். சுமார் 7 கி.மீ. தூரம் மாணிக் சர்க்காரும் ஏனைய தலைவர்களும் நடந்தே சென்றனர். இந்த பிரச்சனையை கேள்விப்பட்ட கத்தாலியாவில் திரண்டிருந்த கட்சி தோழர்களின் கூட்டம் தன்பூர் நோக்கி வந்தது.

இரண்டு பேரணிகளும் சங்கமித்த பின்னர் பெரும் பேரணியாக உருவெடுத்து கத்தாலியாநோக்கி சென்றது. அங்கு மாணிக் சர்க்கார் வட்ட வளர்ச்சிதுறை அதிகாரியிடம் கோரிக்கை மனுவை கொடுத்தார். பின்னர் வெளியில் வந்து ஆயிரக்கணக்கான மக்களிடம் பேசும் பொழுது,”இன்று நீங்கள் செய்தது மிகப்பெரிய சாதனை. இது கத்தாலியாவுக்கு மட்டுமல்ல மாநிலம் முழுவதுக்குமே ஜனநாயகம் காப்பதில் ஒரு எடுத்துக்காட்டு” என்றார். மேலும் திரிபுராவில் மக்கள் பிரிவினர் பலரின் துன்பங்கள்குறித்தும் பேசினார். இந்த நிகழ்வு மாநிலம் முழுவதும் உள்ள கட்சி ஊழியர்களை மட்டுமல்ல; ஏனைய ஜனநாயக சக்திகளையும் எழுச்சியுற செய்தது. கட்சி ஊழியர்களின் தைரிய மிக்க வீரமான இந்தச் செயல் மாநிலம் முழுவதுக்குமே முன்மாதிரியாக அமைந்தது.

பாசிச சக்திகளின் நாட்கள் எண்ணப்படுகின்றன!

இந்த செயல் பா.ஜ.க. தலைமைக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை விளைவித்திருக்க வேண்டும். தங்களது வன்முறை மிரட்டல் முக்கியத்துவம் இழந்துவிடுமோ என அவர்களை கவலையில் ஆழ்த்தியிருக்கக் கூடும். திரிபுராவில் ஏனைய அரசியல் இயக்கங்களும் சமூக அமைப்புகளும் பயந்துகிடக்கும் பொழுது மார்க்சிஸ்ட் கட்சி மட்டும் அரசியல் ரீதியாகவும் களத்திலும் தமக்கு எதிராக உள்ளனர் என்பது அவர்களுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கும். எனவே மார்க்சிஸ்ட் கட்சியை மிரட்டி அச்சுறுத்தி அடக்கி வைக்க  வேண்டும் என முடிவுசெய்தனர். இதன் விளைவுதான் கட்சியின் அலுவலகங்கள் மீதும் ஊழியர்கள் மீதும் பயங்கரத் தாக்குதல். எப்பொழுதும் பாசிச சக்திகள் கம்யூனிஸ்டுகளை தாக்குவதுடன் நின்றுவிடுவது இல்லை. ஏனைய ஜனநாயக சக்திகளையும் விட்டுவைப்பது இல்லை. அந்த வழியில் பா.ஜ.க. அரசாங்கத்தை விமர்சிக்கும் மூன்று தொலைக்காட்சி அலுவலகங்களும் அதன் ஊழியர்களும் தாக்கப்பட்டனர். மேலும் சி.பி.ஐ.(எம்.எல்.) கட்சியின் அலுவலகமும் தாக்கப்பட்டது.
எனினும் பா.ஜ.க. குண்டர்களுக்கு தெரியாது! இத்தகைய கோழைத்தனமான தாக்குதல்களை கண்டு மார்க்சிஸ்ட் கட்சியோ அல்லது அதன் ஊழியர்களோ பயம்கொள்ள மாட்டார்கள் என்பது! காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை கட்சி ஊழியர்கள் கண்டனம் தெரிவித்து வீதிகளுக்கு வந்துள்ளனர்.  பா.ஜ.க. விஷமிகளின் திரிபுரா தாக்குதல்கள்  தேசம் முழுவதும் விவாதப்பொருளாக மாறியுள்ளது. திரிபுரா தோழர்கள் மற்றும் திரிபுரா மக்கள் பக்கம் இந்தியாவில் உள்ள கட்சி ஊழியர்கள் மட்டுமல்ல; அனைத்து ஜனநாயக சக்திகளும் நிற்கின்றன!திரிபுரா உட்பட தேசம் எங்கும் பாசிச சக்திகள் வீழும் நாள் வெகு தொலைவில்இல்லை.

தொகுப்பு : அ.அன்வர் உசேன்