states

img

திரிபுரா மலை மாவட்டக் கவுன்சில் தேர்தலில் வெற்றியை உறுதி செய்கிறது இடது முன்னணி....

திரிபுரா ஆதிவாசிகள் பிரதேசத்தில்  உள்ளாட்சி மாவட்டக் கவுன்சிலுக்கான தேர்தல் ஏப்ரல் 6 அன்று நடைபெறவுள்ளது. 2020-ல் நடைபெற்றிருக்க வேண்டிய இந்தத் தேர்தல் கோவிட் கொரோனாவைச் சுட்டிக்காட்டி வேறு தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது. மார்ச் 4-ல்தான் மாநிலத் தேர்தல் கமிஷன்  தேர்தல் தேதி அறிவிப்பை வெளியிட்டது. இடதுசாரியின் தலைமையில் உள்ள மாவட்டக் கவுன்சிலின் காலவரம்பு நிர்ணயிக்கப்பட்ட பிறகு பாஜக அரசு அங்கு அதிகாரிகளின் நிர்வாகத்தைத் திணித்தது. திரிபுரா உயர்நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்தே தேர்தல் நடத்த வேண்டிய நிர்பந்தம் அரசுக்கு ஏற்பட்டது. இடதுமுன்னணி தவிர மற்ற கட்சிகளும் கூட்டணிகளும் இதன்மீது பிரச்சனை எழுப்பின. ஆளும் கூட்டணியாகிய பாஜக-ஐபிஎப்டியில் சீட்டுகள் பங்கிடுவதில் கடுமையான சர்ச்சை எழுந்துள்ளது. 

28-ல் 17 முகங்கள்
இடதுமுன்னணிக்கும் பாஜக-ஐபிஎப்டி-க்குமிடையேதான் முக்கியப் போட்டி. 28 இடங்கள் உள்ள மாவட்டஉள்ளாட்சிக் கவுன்சிலுக்கு மார்ச் 6 அன்றே இடதுமுன்னணி வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 25 இடங்களிலும், சிபிஐ, ஆர்எஸ்பி, பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகள்  ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன. 5 பெண்கள் உள்பட இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளித்துள்ள பட்டியலில் 17 பேர் புதுமுகங்கள். வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பிறகு இடதுமுன்னணி தொண்டர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெரும் ஊர்வலங்கள் நடத்தினர்.

போட்டியிடும் சீட்டுகள் தொடர்பாக பாஜக-வுக்கும் அதன் கூட்டணிக் கட்சியாகிய ஐபிஎப்டி-க்குமிடையே சர்ச்சை எழுந்துள்ளது. ‘திரிபுரா லாண்டு’க்காக ஆதிவாசி இளைஞர்களைத் திரட்டித்தான் ஐபிஎப்டி கட்சி வளர்ந்தது. இந்தக் கோரிக்கையை முன்வைத்து அவர்கள் 2017-ல் 11 நாட்கள் மாநிலத்தின் நெடுஞ்சாலைகளிலும் ரயில் பாதைகளிலும் மறியல் நடத்தினர். ஆனால் இந்தக் கோரிக்கை வெறும் நாடகமாக முடிந்தது என்பதை இப்போது ஆதிவாசி இளைஞர்கள் புரிந்து கொண்டனர். தற்போதைய சூழலில் திரிபுரா பிரிவினை என்ற கோரிக்கை அபத்தமானது என்ற புரிதல் ஆதிவாசி இளைஞர்களை ஐபிஎப்டி கட்சியிலிருந்து ஒதுங்கியிருக்க வைத்துள்ளது. மக்களின் ஆதரவை இழக்கவேண்டி வரும் என்பதை ஐபிஎப்டி-யும் புரிந்துகொண்டுள்ளது. திரிபுராவின் கடைசி ராஜாவின் இளைய மகன் ப்ரத்யோத் கிஷோர்தேப் பர்மன் தி இன்டிஜீனியஸ் ப்ரோக்ரஸீவ் ரீஜனல் அலயன்ஸ் (டிஐபிஆர்ஏ) என்ற புதிய கூட்டணியை உருவாக்கி களத்தில் உள்ளார். ‘விசால திரிபுரா லாண்ட்’ என்ற குறிக்கோளுக்காக இந்த தேர்தலில் டிஐபிஆர்ஏ, ஐபிஎப்டி, டிஎஸ்பி ஆகிய அமைப்புகள் ஒன்றுசேர்ந்து போட்டியிடுமென்று கிஷோர் தேப் பர்மன் தனது முதலாவது பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் தெளிவாக்கிவிட்டார்.

மிரட்டி கூட்டணி சேர்க்கும் பாஜக
அசாம், மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் பகுதிகளும், பங்களாதேசில் சிட்டகாங் மலைத் தொடரும் உள்ளிட்டதுதான் அவர்களின் ‘விசால திரிபுரா லாண்ட்’ எனும் லட்சியம். இந்த முயற்சியை போட்டியிடும் இடங்களின் பங்கீட்டுச் சர்ச்சைகளில் பாஜக-வுடன் கூடுதல் விலைபேசுவதற்கான அரசியல் வாய்ப்பாகஐபிஎப்டி கண்டது. ஆனால், ஐபிஎப்டி கட்சியின் இந்த நிலைபாட்டில் பாஜக கோபம் அடைந்தது. கூட்டணியிலிருந்து நாங்கள் விலகிவிடுவோம் என்று மிரட்டியது. கூட்டணியிலிருந்து விலகினால் ஐபிஎப்டி கட்சிக்கு இரண்டு அமைச்சர் பதவிகளும், பல்வேறு வாரியங்களில் கிடைத்த பதவிகளும் பறிபோகும். அதுமட்டுமல்ல, ஊடகச் செயல்பாட்டாளராகிய சாந்தனு பௌமின் கொலை வழக்கு மீண்டும் விசாரிக்கப்படுவது இவர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. ஐபிஎப்டி கட்சியின் முக்கிய தலைவர் குற்றச்சாட்டுக்கு இலக்கான வழக்கு இது. இந்த அச்சுறுத்தல் உடனடியாகப் பலித்தது. டிஐபிஆர் கட்சியுடனான கூட்டு செயல்நிலைக்கு வருவதற்கு முன்பே அதிலிருந்து ஐபிஎப்டி பின்வாங்கியது.

ஆனால், இடங்களை பாஜக-வுடன் பங்கிடுவது என்கிற பெயரில் சர்ச்சை தொடர்கிறது. இரு கட்சிகளும் சீட்டுகளைப் பங்கிடுவதைப் பூர்த்திசெய்தாலும் மூன்று இடங்களில் சகோதரப் போட்டி உறுதி. விசால திரிபுரா லாண்ட் என்ற முழக்கத்தை எழுப்பி ஆதிவாசி இளைஞர்களைக் கவர்ந்து ஆதிவாசிகளின் ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கானதாக இருந்தது கிஷோர்தேப் பர்மனின் நடவடிக்கை. இது துவக்கத்திலேயே தோல்வியடைந்தது. டிஐபிஆர்ஏ -–காங்கிரஸின் பாரம்பரிக் கூட்டணிக் கட்சியாகிய பிஜோய் குமார் ஹக்வாலின் தலைமையில் உள்ள ஐஎன்பிடியுடனும் டிஎஸ்பி-யுடனும் கூட்டுச்சேர்ந்து போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

பாதல் சௌத்ரி மீதுபாஜக குண்டர்கள் தாக்குதல்
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மார்ச் 4 முதலே உள்ளாட்சிக் கவுன்சிலுக்கு உட்பட்ட பிரதேசங்களில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இந்த நடத்தை விதிமுறைகளை மீறித்தான் ஆளும் கட்சியாகிய பாஜக அறிவிப்புகள் செய்கிறது; வன்முறைகள் நடத்துகிறது. பாஜக-வும் அதன் கூட்டுக் கட்சியும் சேர்ந்து எதிர்க்கட்சிஊழியர்கள் மீது விரிவான அளவில் வன்முறைத் தாக்குதல்களை நடத்த ஆரம்பித்துள்ளன. அவர்கள் தோழர் தனன்த்யோதி தியாக நினைவு நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பாதல் சௌத்ரியைத் தாக்கினர். மணிராம்பரியில் தனன்த்யோதியின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தச் சென்ற பாதல் சௌத்ரியைக் கொல்லுவது என்ற நோக்கத்துடன் பாஜக குண்டர்கள் சென்றனர். இது போலீஸின் முன்னாலேயே நிகழ்ந்தது. பாஜக மேல்மட்டத் தவைர்களுக்குத் தெரிந்தே இது நடந்தது.

வேட்பு மனு வாங்கி திரும்பி வருகையில் இடதுமுன்னணியின் பெண் வேட்பாளர் அஞ்சலிகலியை பாஜகவின்கூட்டணிக் கட்சியாகிய ஐபிஎப்டி குண்டர்கள் கொடூரமாகத் தாக்கினர். ‘நீ வேட்பு மனு தாக்கல் செய்தால் உன்மீது தாக்குதல் மேலும் மோசமாக இருக்கும்’ என்றும் மிரட்டினர். முன்னாள் ஏடிசி உறுப்பினரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜம்பைஜாலா டிவிஷன் செயலாளருமாகிய ராமேந்த்ர தேப்பர்மவைக் கொல்லுவதற்கு முயன்றனர். மற்ற பல இடங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர்களுக்கு எதிராக பாஜக வன்முறையாளர்கள் போலீஸ் உதவியுடன் தாக்குதல் நடத்தினர்.

அப்பட்டமான விதிமீறல்
மார்ச் 6 அன்று மாவட்டத் தேர்தல் அதிகாரியுமான மேற்கு திரிபுரா மாவட்ட ஆட்சியர் விசித்திரமான ஒரு உத்தரவு பிறப்பித்தார். மார்ச் 9 அன்று அகர்தலாவில் உள்ள விவேகானந்தர் மைதானத்தில் பிரதமரும் அமைச்சர்களும் பங்கேற்கிற பொதுக்கூட்டத்திற்குச் செல்லுகிற அனைவரின் பயணச் செலவையும் அரசு ஏற்கும் என்பதாக அவரது உத்தரவு இருந்தது. கடந்த மூன்று ஆண்டுகளில் திரிபுராவில் பாஜக ஆட்சி பெரும் சாதனைகளை நிகழ்த்தியதாக அந்தப் பொதுக்கூட்டத்தில் பேசுகையில் பிரதமரும் மாநில அமைச்சர்களும் கூறிக்கொண்டனர். முந்தைய இடதுமுன்னணி அரசு ஆரம்பித்து வைத்த மற்றும் அறிவித்த திட்டங்களைச் சொல்லித்தான் இவர்கள் அந்தத் திட்டங்கள் தங்களுடையதாகப் பெருமையடித்துக் கொண்டனர். வழிபாட்டுத் தலங்களுக்கு இலவச வாகன வசதிகள் செய்துதரப்படும் என்ற அறிவிப்பு அப்பட்டமான தேர்தல் நடத்தைவிதி மீறலாகும். 

உள்ளாட்சி மாவட்டக் கவுன்சில் தேர்தல் நடைபெறவுள்ள  மாவட்டங்களில் மக்களைச் சட்டவிரோதமாகக் கவர்வதற்காகவே இத்தகைய அறிவிப்புகள்  செய்கிறார்கள். மாவட்ட உள்ளாட்சிக் கவுன்சில் தேர்தலில் தோற்றுவிடுவோம் என்பது தெளிவானவுடன் அரசு ஏற்பாடுகளை தவறாகப் பயன்படுத்தியும், வன்முறைகளைப் பரப்பிவிட்டும், ஜனநாயக முறையில் நடைபெறவேண்டிய தேர்தலைச் சீர்குலைக்க பாஜக முயற்சி செய்கிறது.மக்களை அணிதிரட்டி வன்முறைகளை எதிர்த்துத் தோல்வியுறச் செய்து தேர்தல் பிரச்சாரத்தை ஜனநாயக முறையில் தீவிரப்படுத்துவதற்கு இடதுமுன்னணி முயற்சி செய்கிறது.

தமிழில்: தி.வரதராசன்