திரிபுரா மாநில சிபிஐ(எம்) கட்சி தலைவர்கள் மீது பாஜக ஆர்எஸ்எஸ் கும்பல் கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பத்திரிக்கை அலுவலகங்கள் சூறையாடி உள்ள நிலையில் கண்டனம் முழங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுத்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது
திரிபுரா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் மீது கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதோடு, கட்சி அலுவலகங்களும், பத்திரிக்கை அலுவலகங்களும் திட்டமிட்ட முறையில் சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இத்தகைய மிக மோசமான தாக்குதலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு தனது வலுவான கண்டனத்தை தெரிவித்துள்ளதோடு, இத்தகைய ஜனநாயக படுகொலையை கண்டித்தும், தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் நாடு தழுவிய கண்டன இயக்கத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளது.
பாஜக குண்டர்கள் நடத்திய தாக்குதலில் அகர்தலாவில் உள்ள கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தின் இரண்டு தளங்கள் தீக்கிரையாக்கப்பட்டதோடு அங்கிருந்த பொருட்களும் சூறையாடப்பட்டுள்ளன. அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டதோடு, கோமதி மாவட்டத்தில் உள்ள மாவட்டக்குழு அலுவலகம், மேற்கு திரிபுரா மாவட்டக்குழு அலுவலகம் உதயப்பூரில் உள்ள வட்டாரக்குழு அலுவலகம் உள்ளிட்ட பல அலுவலகங்களும் தீவைப்பு சம்பவங்களால் பெரும் சேதமடைந்துள்ளன. தேசர்கதா நாளிதழ் அலுவலகம், 24 நியூஸ் சமூக ஊடக அலுவலகம் ஆகியவையும் தாக்குதலுக்காப்பட்டிருக்கிறது. திரிபுரா மாநில மக்களின் ஒப்பற்ற தலைவராக விளங்கும் தசரத்தேவ் அவர்களின் சிலையும் உடைக்கப்பட்டிருக்கிறது. கட்சியின் பல்வேறு மட்ட தலைவர்களும் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த தாக்குதலுக்கு சிறிது நேரத்திற்கு முன்னர், அகர்தலாவில் உள்ள கட்சியின் மாநில தலைமை அலுவலகம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மத்திய காவல் படையின் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதும், பல தாக்குதல்கள் மாநில காவல்துறையின் கண் முன்னாலேயே நடத்தப்பட்டதையும் பார்க்கும் போது, இது மாநிலத்தில் ஆளும் பாஜக அரசின் ஆதரவோடு நிகழ்த்தப்பட்ட தாக்குதலேயாகும் என்பது தெளிவாகிறது. எனவே, இத்தகைய மிக மோசமான தாக்குதலில் ஈடுபட்ட அனைவரும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டுமெனவும், தாக்குதல் குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சகம் நேரடியான விசாரணையை நடத்த முன்வர வேண்டுமெனவும், திரிபுரா மாநிலத்தில் தொடர்ச்சியாக நிகழ்த்தப்பட்டு வரும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஒன்றிய பாஜக அரசை வலியுறுத்துகிறது. இத்தாக்குதலை கண்டித்து தமிழகம் முழுவதும் கட்சிக் கிளைகள் சார்பில் வலுவான கண்டன இயக்கங்களை நடத்திட வேண்டுமென கட்சி அணிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது