திரிபுராவில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்பால் இதுவரை 10 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரிபுராவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு மாவட்டங்கள் மிகுந்த பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. முக்கிய ஆறுகளில் நீர்மட்டம் அபாயக் கட்டத்தைத் தாண்டியுள்ளது. தெற்கு திரிபுரா மாவட்டத்தின் தேவிபூர் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடு இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியாகியுள்ளனர். அதுமட்டுமின்றி, கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் போன்றவற்றால் 7 பேர் என மொத்தமாக 10 வரை உயிரிழந்துள்ளனர்.
8 மாவட்டங்களைச் சேர்ந்த 6,620 குடும்பங்கள், மொத்தம் 34,100 பேர் 346 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் பெய்துவரும் கனமழையையடுத்து கல்வி நிறுவனங்களுக்கு இன்றும், நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்துமாறு, மாவட்ட நிர்வாகங்களுக்கு முதல்வர் மாணிக் சாஹா உத்தரவிட்டுள்ளார். மீட்புப் பணிகளுக்கு உதவக் கூடுதலாக நான்கு தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் மாநிலத்திற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.