ஜனநாயக வாலிபர் சங்கம் கண்டனம் மதுரை, ஜன.8 - மதுரை அரிட்டாபட்டி - நாயக்கர்பட்டி டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ள நிலையிலும், மக்கள் போராட்டத்தை அடக்க காவல்துறை மேற் கொள்ளும் நடவடிக்கைகள் கண்டனத்துக் குரியது என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.கார்த்திக், செயலாளர் ஏ.வி. சிங்காரவேலன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் சம்பவங்களை விவரித்துள்ள னர். சட்டசபையில் தீர்மானம் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சுரங்கத்துறை அமைச்சரை சந்தித்து மனு அளித்ததுடன், நாடாளுமன்றத்திலும் இப்பிரச்சனையை எழுப்பியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் மேலூரில் பெரும் போராட்டம் நடைபெற்றது. தமிழக சட்டசபையில் இத்திட்டத்திற்கு எதிராக அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பல்லுயிர் பாதுகாப்பு மண்டலம் தமிழக அரசால் பல்லுயிர் தளமாக அறிவிக்கப்பட்ட அரிட்டாபட்டி மலைப்பகுதி யில் சமணர் படுக்கை, தமிழ் பிராமி கல்வெட்டுகள், பாண்டியர் கால சிவன் கோயில், நீரூற்றுகள் உள்ளன. முல்லைப் பெரியாறு பாசனத்தில் விவசாயம் செய்யப்படும் இப்பகுதியில் சுரங்கம் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மூன்று நாள் மக்கள் நடைபயணம் டிசம்பர் 20 முதல் 22 வரை வாலிபர் சங்கம் கிடாரிப்பட்டி முதல் மேலூர் வரை மக்கள் நடைபயணம் நடத்தியது. நூற்றுக் கணக்கான இளைஞர்கள், பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர். காவல்துறை தடை விதித்தும் மக்கள் ஆதரவுடன் நடை பயணம் வெற்றிகரமாக நடைபெற்றது. விவசாயிகள் போராட்டம் இந்நிலையில், ஜனவரி 7 செவ்வாயன்று நரசிங்கம்பட்டி முதல் தமுக்கம் வரை ஒரு லட்சம் விவசாயிகள் அணிதிரண்டனர். அரசியல் கட்சிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இணைந்தனர். இத்தனை பெரிய மக்கள் இயக்கத்தில், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் தமிழரசன் மீது காவல்துறை குறி வைத்து தாக்குதல் நடத்தியது. மக்கள் எதிர்ப்பால் அவர் விடுவிக்கப்பட்டார். பல நூறு காவலர்கள் குவிக்கப்பட்டனர். தடுப்பு வேலிகள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. தமுக்கத்தில் மட்டுமே போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஒன்றிய அரசுக்கு எதிரான போராட்டத்தில் காவல்துறை இவ்வளவு அடக்குமுறை ஏன்; என்ற கேள்வி எழுகிறது. தமிழக காவல்துறை யை இயக்குவது யார்? மேலும் 5000 பேர் மீது வழக்கு ஏன்? தமிழரசன் மீது குறிவைத்த தாக்குதலுக்கு யார் உத்தரவிட்டது? என்ற கேள்வியும் எழுகிறது. இத்தாக்குதலுக்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாலிபர் சங்கம் வலி யுறுத்தியுள்ளது. டங்ஸ்டன் திட்டம் முழுமை யாக ரத்து செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் எனவும் அறிவித்துள்ளது.