தமிழக சட்டசபையில் ஆளுநர் உரை ஒரு முக்கிய நிகழ்வாக இருக்க வேண்டியது. ஆனால் ஆண்டு தோறும் அது சர்ச்சைக்குரிய நிகழ்வாக மாறிவருவது வருத்தத்தி ற்குரியது. குறிப்பாக, தற்போதைய ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக சர்ச்சைகளை உருவாக்கி வருகிறார். சமீபத்திய சர்ச்சையில், தேசியகீதம் முன்னதாக இசைக்கப்படவில்லை என்ற காரணத்தைக்கூறி, அரசிய லமைப்புச் சட்டமும் தேசிய கீதமும் அவமதிக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டி பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தார். ஆனால், தமிழக அரசின் வழக்கப்படி, ஆளுநர் உரைக்கு முன் மாநில கீதமும், பின்னர் தேசியகீதமும் இசைக்கப்படுவதே நடைமுறை. இது ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னதாகவே தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டுகளிலும் இதேபோன்ற சர்ச்சைகளை உருவாக்கியவர் ஆளுநர். அரசின் கொள்கை விளக்க உரையில் திராவிட ஆட்சி முறை பற்றியும், மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்தும் குறிப்பிடப்பட்டி ருந்தது. ஆனால் அவற்றை வாசிப்பதற்கு மறுப்பு தெரிவித்து, உண்மைகள் திரிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். சமீபத்தில் பல மாநிலங்களில் ஆளுநர் மாற்றங்கள் நடந்துள்ளன. கேரள ஆளுநர் பீகாருக்கு மாற்றப்பட்டார். மணிப்பூர், மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால் தமிழகத்தில் பல சர்ச்சைகளை உருவாக்கியிருந்தும் திரு.ரவி மாற்றப்படவில்லை. 2019-ல் நாகாலாந்தில் பதவியேற்ற ரவி, 2021-ல் தமிழகத்திற்கு மாற்றப்பட்டார். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் காலதாமதம் செய்வது, அடிக்கடி அரசியல் சர்ச்சைகளில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். உச்சநீதிமன்றம் சமீபத்தில், ஆளுநர்கள் தங்கள் பதவியை தவறாகப் பயன்படுத்தி மாநில அரசின் நிர்வாகத்தை சீர்குலைக்கக் கூடாது என அறிவுறுத்தியுள்ளது. ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசுடன் திரு.ரவி தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடிப்பது, ஒன்றிய அரசின் உள்நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. மாநில அரசின் பொறுமையை சோதிப்பதே அவரது நோக்கமாக தெரிகிறது. இந்நிலையில் அவர் தொடர்ந்து பதவியில் நீடிப்பது கேள்விக்குறியாகவும், வியப்பாகவும் உள்ளது. ஜன.1, 2025 ஏட்டில் வெளியானது தமிழ்ச் சுருக்கம் : கடலூர் சுகுமாறன்