சென்னை, ஜன. 13 - தமிழ்நாடு நிதியமைச்சர், கடந்த வெள்ளிக் கிழமையன்று (ஜன.10) சட்டமன்றத்தில் வெளியிட்ட ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் குறித்த கருத்துக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கடும் கண்டனம் தெரி வித்துள்ளது. 2021-ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, தற்போதைய முதல்வர் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில அளவிலான போராட்ட ஆயத்த மாநாட்டில் காணொலி வாயிலாக கலந்து கொண்டு, கழக ஆட்சி வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டம் உட்பட அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார். மேலும் 2021 தேர்தல் அறிக்கையிலும் புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே, தற்போது புதிய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள 6,14,175 பேர் விரைவில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அரசு அமல் படுத்தும் என எதிர்பார்த்துக் காத்திருக்கின்ற னர். ஆனால், நேற்று சட்டமன்றத்தில் நிதி யமைச்சர், ஒன்றிய அரசு அறிவித்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்ட பின்பு அத்திட்டம் செயல்படுத்த ஆலோ சிக்கப்படும் என அறிவித்துள்ளார். இது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தி யில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்பிரச்சனையில், சட்டமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் வி.பி. நாகை மாலி எழுப்பிய கேள்விகளுக்கு முழுமையாக பதிலளிக்காதது ஏமாற்ற மளிப்பதாக உள்ளது என்றும் அரசு ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. 64.22 லட்சம் பட்டதாரி இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளதாகவும், ஆனால் அரசுத்துறைகளில் காலியாக உள்ள 5 லட்சம் பணியிடங்களை நிரப்ப காலம் தாழ்த்தப்படுவதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் குறைந்த அளவில் நிரப்பப்படும் பணியிடங்கள் கூட தொகுப்பூதிய, மதிப்பூதியம், அவுட் சோர்சிங் (Out Sourcing) முறையில் நிரப்பப்படுவது சமூக நீதி காக்கும் அரசு என்பதன் பொருளை கேள்விக்குறியாக்கியுள்ளது என்றும் தெரிவித்துள்ளது. கடந்த அக்டோபர் 8-ஆம் தேதி மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிராக மாலை நேர தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது. மேலும் கடந்த மாதம் 13, 14 தேதிகளில் தூத்துக்குடியில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 15ஆம் மாநில மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட அறைகூவல் தீர்மானத்தின்படி, தமிழகமெங்கும் வலுவான ஒன்றுபட்ட கால வரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்த வேண்டிய நிர்பந்தத்திற்கு அரசு ஊழி யர்கள் தள்ளப்பட்டுள்ளதாக சங்கத்தின் மாநிலத் தலைவர் மு. பாஸ்கரன் மற்றும் பொதுச்செயலாளர் மு. சீனிவாசன் ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.