states

கடன் வசூல் என்ற பெயரில் நுண்நிதி நிறுவனங்கள் அடாவடித்தனம்

கடன் தொல்லைகளால் தற்கொலை செய்து கொண்ட குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் பழங்குடி மக்களின் நிலங்களை பழங்குடி அல்லாதோர் வாங்குவதை செல்லாது என அறிவிக்க வேண்டும்.

திருப்பத்தூர், செப். 11 - தமிழ்நாடு பழங்குடி மக்களிடம் கடன் வசூல் என்ற பெயரில் அடாவடித்தனம் செய்து வரும் நுண்நிதி நிறுவன ஊழியர்கள் மீது மாநில அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநி லக்குழு கூட்டம் ஏலகிரியில் மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் இரா.சரவணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பெ.சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: தமிழ்நாடு முழுவதும் நுண்நிதி நிறுவனங் களின் கடன் பெற்ற பழங்குடி மக்களிடம் அதிக வட்டி வசூலிப்பதை தடுக்க வேண்டும். கடன் வசூல் என்ற பெயரில் சித்ரவதை, அவமரியாதையாக நடத்தும் செயல்களில் ஈடுபடும் நுண்நிதி நிறுவன ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கடன் தொல்லைகளால் தற் கொலை செய்து கொண்ட குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

சமூக பொருளாதார கணக்கெடுப்பில் குளறுபடி!

தமிழ்நாடு அரசு சார்பில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களை கொண்டு தற்போது பழங்குடி மக்கள் சமூக பொருளாதார கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. அனைத்து மக்களையும் கணக்கெடுப்பில் சேர்க்காமல் சாதிச்சான்று வைத்து உள்ளவர்களை மட்டுமே கணக்கெடுத்து வருகின்றனர். குறிப்பாக திருவள்ளூர், திண்டுக்கல், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இப்படி செய்து வருகின்றனர். மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் வழிகாட்டுதலின்படி செயல்படுவதாகத் தெரிவித்துள்ளனர். எனவே இந்த கணக்கெடுப்பில்  கடந்த 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் அரசு பட்டியலில் உள்ள 37 பழங்குடி பிரிவினரையும் சேர்த்து கணக்கெடுக்க வேண்டும்.

நில மாஃபியாக்கள் அட்டூழியம்

ஏலகிரி மலை போன்ற பகுதிகளில் நில மாஃபியாக்கள் அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிப்பதோடு பழங்குடி மக்கள் பயன்பாட்டில் உள்ள நிலங்களை அபகரிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே இதனை தடுக்கும் வகையில் தருமபுரி மாவட்டம் சிட்லிங் மலையில் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு அம்மக்களுக்கு வழங்கியது போன்று உறுதியான நடவடிக்கையை தமிழ்நாடு அரசும், அந்தந்த மாவட்ட நிர்வாகங்களும் உறுதி செய்ய வேண்டும். தமிழ்நாடு முழுவதும் பழங்குடி மக்களின் நிலங்களை பழங்குடி அல்லாதோர் வாங்குவதை செல்லாது என அறிவிக்க வேண்டும்.

பழங்குடிப் பெண்களுக்கு விழிப்புணர்வு

தமிழ்நாடு அரசு மகளிர் திட்டம் விடியல் திட்டம் போன்றவைகளை அவர்களது வாழ்வியல் முன்னேற்றத்திற்கு அறிவித்துள்ளது. ஆனால் மாநிலம் முழுவதும் மாவட்ட நிர்வாகங்கள் இதில் உரிய கவனம் செலுத்துவதில்லை. எனவே இந்த திட்டங்கள் குறித்து விழிப்புணர்வை பழங்குடி மக்களிடம் ஏற்படுத்தி சுய உதவிக்குழுக்கள் மூலம் சுயதொழில் செய்ய பயிற்சி அளித்து அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்க வேண்டும்.

வாச்சாத்தி கிராமத்தை மேம்படுத்த வேண்டும்

வாச்சாத்தி வழக்கில் தீர்ப்பு வந்து ஒரு ஆண்டாகிவிட்டது. பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு தமிழ்நாடு அரசு வழங்கியதை தமிழ்நாடு  மலைவாழ் மக்கள் சங்கம் வரவேற்கிறது. அதே நேரத்தில், ஒட்டு மொத்த கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது பணியில் இருந்த மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அம்மக்களின் முன்னேற்றம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட நீதிமன்றத்தின் அனைத்து உத்தரவுகளையும் காலதாமதமின்றி நிறைவேற்ற தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மானிடவியல் ஆய்வாளர்கள் குழு அமைக்கப்பட்டு திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் பழைய வத்த லக்குண்டு, பரசுராமபுரம், கண்ணாபட்டி ஆகிய கிராமங்களில் வசிக்கும் மலை வேடன் பழங்குடி யினர் மக்கள் குறித்து இனவரைவியல் கள ஆய்வு  நடத்தி ஆய்வறிக்கையை இயக்குநருக்கு பழங்குடியினர் நலக்குழு கடந்த மார்ச் மாதம் அளித்துள்ளது.

ஆய்வறிக்கையை வெளியிட்டவர் மீது நடவடிக்கை தேவை

இந்த ஆய்வறிக்கையை இக்குழுவில் இடம் பெற்றுள்ள ஆய்வாளர்களில் ஒருவர் முனைவர் இக்னேசியஸ் பிரபாகரன் அவர்கள் 14 மானிடவியல் ஆய்வாளர்கள் கொண்ட வாட்ஸ் அப் குழுவில் கடந்த 2024 ஆகஸ்ட் 27 அன்று பகிர்ந்துள்ளார். தமிழக அரசிடம் சமர்பிக்கப்பட்ட அறிக்கை குறித்து அரசு எவ்வித முடிவும் எடுக்கப்படாத சூழ லில், அரசின் பரிசீலனையில் உள்ள நிலையில்,  அரசின் அறிக்கையை ஒரு தனி நபர் சமூக வலைத்தளத்தில் பகிர்வது என்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும். அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகு அது அரசின் சொத்தாக கருதப்படும். இந்நிலையில் தமிழ்நாடு அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் உள்நோக்கத்துடன்  ஆய்வறிக்கையை பொதுத்தளத்தில் பகிர்ந்த முனைவர் இக்னேசியஸ் பிரபாகரன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.