கோயம்புத்தூர், ஜன. 29 - மேட்டுப்பாளையம் தம்பதி ஆண வக்கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேட்டுப்பாளையம் ஸ்ரீரங்கராயன் ஓடை பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் வினோத்குமார் (25). இவ ரது சகோதரர்கள் கனகராஜ் (22), கார்த்திக் (19). மூவருமே சுமைதூக்கும் தொழிலாளர்களாகப் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் கடந்த 2019-இல், கனகராஜ், வேறு சமுதாயத்தைச் சேர்ந்த வர்ஷினி பிரியா என்ற பெண்ணைக் காதலித்துள்ளார். அவரை திருமணம் செய்ய கனகராஜ் வீட்டில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக கனகராஜின் சகோதரர்கள் இதைக் கடுமையாக எதிர்த்துள்ளார். வர்ஷினி பிரியா வீட்டிலும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அவர் வீட்டை விட்டு வெளியேறி கனகராஜின் வீட்டுக்கு வந்துள்ளார். ஆனால், அவரை கனக ராஜின் குடும்பத்தினர் கடுமையாக விமர்சித்து, திருப்பி அனுப்பி விட்டனர். தனது வீட்டுக்கும் திரும்ப முடியாத நிலையில், மீண்டும் கனகராஜ் வீட்டிற்கே வர்ஷினி பிரியா வந்த போது, கனகராஜை தனியாக வீடு பார்த்துச் செல்லுமாறும், குடும்பத் தாரை சமாதானம் செய்த பிறகு, திரு மணம் செய்து வைப்பதாகவும் அவ ரது தந்தை கருப்பசாமி கூறியுள்ளார். ஆனால் இதை விரும்பாத கனக ராஜின் அண்ணன் வினோத்குமார், தனது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து, 2019 ஜூன் 28 அன்று தம்பி கனகராஜை, அவரது வீட்டிற்கே சென்று அரிவாளால் வெட்டினார். அப்போது குறுக்கே வந்த வர்ஷினியையும் அவர் வெட்டினார். இதில் கனகராஜ் அதே இடத்தில் உயிரிழந்தார். வர்ஷினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சைப் பலனின்றி இறந்துவிட்டார். பட்டியலினத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்த காரணத் திற்காக, அந்தப் பெண்ணையும், தமது உடன்பிறந்த தம்பியையுமே வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில், வினோத் குமாருடன் கந்தவேல், ஐயப்பன், சின்னராஜ் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கு, பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடி யினர் மீதான வன்கொடுமைத் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில், ஜனவரி 23 அன்று வினோத்குமாரை முக்கியக் குற்றவாளி என்று அறிவித்த நீதிபதி விவே கானந்தன், மற்ற மூவர் மீதான குற்றங்களும் நிரூபிக்கப்படவில்லை என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், குற்றவாளி வினோத் குமாருக்கு தூக்குத் தண்டனை விதித்து புதனன்று தீர்ப்பளித்துள்ளார்.