‘ரெண்டும் ரெண்டு ஆப்பை; ரெண்டும் கழண்ட ஆப்பை’ என்று ஒரு கிராமத்துச் சொலவடை உண்டு. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டி யிடும் கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்டு டிரம்ப் நடத்திய விவாதத்தைப் பார்க்கும் போது இந்த சொலவடைதான் நினைவுக்கு வருகிறது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரும் நவம்பர் 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் இப்போதைய ஜனாதிபதி ஜோ பைடனும், குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இருவருக்குமிடையிலான முதல் விவாதத்தின் போது ஜோ பைடன் திணறியதால் ஜனநாயகக் கட்சி சார்பில் இப்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் களமிறக்கப்பட்டார்.
இந்த நிலையில், கமலா ஹாரிசுக்கும் டொ னால்டு டிரம்புக்கும் இடையில் நடைபெற்ற விவா தத்தை காரசாரமான கருத்து மோதல் என ஊட கங்கள் வர்ணிக்கின்றன. ஆனால் பல்வேறு பிரச்ச னைகளில் இருவருக்கும் இடையில் வல்லரசின் கொள்கைகளை தீவிரமாக நடைமுறைப்படுத்தப் போவது யார் என்பதில்தான் மோதல் நடந்துள்ளது.
கடைந்தெடுத்த வலதுசாரியான டிரம்ப் வழக் கம் போல குடியேற்ற மக்கள் மீது வன்மத்தைக் கக்கி யுள்ளார். ஒரு மிகப் பெரிய பொறுப்புக்கு போட்டி யிடும் டிரம்ப் கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் விவா தத்தின் போது பொய் பேசினார். விவாதத்தை நெறிப்படுத்தியவர்கள் உடனுக்குடன் இதை சுட்டிக்காட்டினர்.
உதாரணமாக அமெரிக்காவில் குடியேறிய ஹைட்டி நாட்டினர் நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளை அடித்துச் சாப்பிடுவதாக டிரம்ப் கூறினார். இதற்கு எந்த ஆதாரமும் இல்லை என நெறியாளர்கள் மறுத்தனர்.
கருக்கலைப்பு தொடர்பான விவாதம் இந்த தேர்தலில் முக்கிய விவாதமாக மாறியுள்ளது. டிரம்ப் வெற்றி பெற்றால் கருக்கலைப்பை முற்றாக தடை செய்வார் என கமலா ஹாரிஸ் குற்றம்சாட்ட, டிரம்ப் இதை மறுத்தார். ஆனால் சில மாகாணங்க ளில் பிரசவத்துக்கு முந்தைய கருக்கலைப்பு அனு மதிக்கப்படுவதாக டிரம்ப் கூறினார். சிசுக் கொலை யை எந்த மாகாணமும் அனுமதிக்கவில்லை என நெறியாளர்கள் மறுப்பு தெரிவித்தனர்.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவுடன் இனவெறி இஸ்ரேல் அரசு பாலஸ்தீன மக்களை கொன்று குவித்து வருகிறது. கமலா ஹாரிஸ் இஸ்ரேலுக்கு எதிரானவர் என டிரம்ப் கூற, இல்லை; இஸ்ரேலைப் பாதுகாப்பதுதான் எனது நோக்கம் என்று கமலா ஹாரிஸ் மறுத்துள்ளார். இஸ்ரேலின் அடாவடி ஆக்கிரமிப்பை ஆதரிப்ப தில் இருக் கட்சிகளுக்குமிடையில் வேறுபாடு இல்லை. பாலஸ்தீன மக்களின் பாதுகாப்பு குறித்து இவர்களுக்கு கவலையில்லை. மாறாக, பாலஸ் தீனத்தை உலக வரைபடத்திலிருந்தே அழித்து விடத் துடிக்கும் இஸ்ரேலை ஆதரிப்பதில்தான் இருவரும் போட்டியிடுகின்றனர் என்பது தெளிவு. தொடர்ந்து விவாதத்தில் ஈடுபட விரும்பவில்லை என டிரம்ப் கூறியிருப்பது அதை உறுதிப்படுத்துகிறது.