சென்னை, நவ.28- வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடதமிழக, புதுவை கடலோரப் பகுதிகளில், காரைக்காலுக்கும் - மாமல்லபுரத்துக்கும் இடையே வரும் 30 ஆம் தேதி கரையை கடக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் கூறுகையில், நவ.27 ஆம் தேதி காலை 8.30 மணி அளவில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வியாழக்கிழமை (நவ.28) காலை 8.30 மணி அளவில் அதே பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகராமல் சுமார் 6 மணி நேரமாக நிலைகொண்டிருந்தது என்றார். இலங்கையின் திரி கோணமலையில் இருந்து கிழக்கு-வடகிழக்கே சுமார் 110 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகபட்டினத்திலிருந்து தென்கிழக்கே 310 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவையிலிருந்து தென்கிழக்கே 410 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 480 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது, வடக்கு-வடமேற்கு திசையில் இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டி நகரக்கூடும். அதன் பிறகு, மேலும் வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக - புதுவை கடலோரப்பகுதிகளில், காரைக்காலுக்கும் - மாமல்லபுர த்துக்கும் இடையே 30 ஆம் தே தி காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கக்கூடும் என்றும் கூறினார்.
தற்காலிக புயல்
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வெள்ளிக்கிழமை காலைக்குள் தற்காலிகமாக புயலாக வலுப்பெறக் கூடும். அதன் பின்னர் வலு குறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைக் கடக்கும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நவ.29 ஆம் தேதி காலை வரை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும்போது, புயலாக வலுப்பெற்று காற்றின் வேகம் மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 85 கிலோ மீட்டர் வேகத்திலும் வீச வாய்ப்பு உள்ளது.
நான்கு நாட்களுக்கு கன-அதிகன மழை
அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்கள், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்ட ங்களில் (நவ.29) அன்று அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சி புரம், அரியலூர், தஞ்சாவூர், ராணிப்பே ட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைபெய்ய வாய்ப்புள்ளது. நவ.30 அன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஆகிய மாவட்டங்களில் அதிகன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மயிலாடுதுறை, நாகை, காரைக்கால், வேலூர், சேலம், திருச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர். அரியலூர் ஆகிய மாவட்டங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. டிசம்பர் 1 ஆம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். டிச.1 ஆம் தேதி, வடதமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், தென்தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். வங்கக்கடல் பகுதியில், ஆந்திர கடலோர பகுதிகளில், நவ.28 ஆம் தேதி காலை முதல் நவ. 29 ஆம் தேதி மாலை வரை, சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அதன் பிறகு, காற்றின் வேகம் உயர்ந்து, 30-ஆம் தேதி மதியம் வரை மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.