states

தீக்கதிர் விரைவு செய்திகள்

விடுபட்டவர்களுக்கு 3 மாதங்களில்  மகளிர் உரிமைத் தொகை : துணை முதல்வர்

சென்னை, ஜன. 8 - தமிழக சட்டப்பேரவையில் 2025-ஆம்  ஆண்டின் முதல் கூட்டத்தொடர் நடை பெற்று வருகிறது. மூன்றாவது நாளான புதன்கிழமை (ஜன.8) கேள்வி நேரத்தின் போது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை குறித்து உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்தார். துணை முதல்வ ராக இது அவரது முதல் பதிலாகும். அப்போது, “மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அமல்படுத்துவதற்காக சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு, தமிழகம் முழு வதும் 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப் பட்டன. அவற்றை ஆய்வு செய்ததன் அடிப்படையில் கிட்டத்திட்ட 70 சதவிகித விண்ணப்பங்கள் முதற்கட்டமாக ஏற்கப்பட்டன. மேலும், முதல்முறை விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப் பட்டது. அதன்படி, கூடுதலாக 9 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. கடந்த டிசம்பர் மாதம் 1.14 லட்சம் மகளிருக்கு ரூ. 1,000 உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது. தற்போது விடுபட்ட வர்களில் தகுதியுள்ளவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தகுதி யுள்ள அனைவருக்கும் உரிமைத் தொகை  வழங்குவது தொடர்பான கோரிக்கைகளை முதல்வருக்கு கொண்டு சென்றுள்ளோம். 3 மாதங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ஆளுநர் ரவியின் செயலுக்கு  பேரவைத் தலைவர் கண்டனம்

சென்னை, ஜன. 8 - தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என். ரவி வெளியேறியது குறித்து பேரவைத் தலைவர் மு. அப்பாவு விளக்கம் அளித்து பேசியதாவது:- சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேற அதிமுகவினரே காரணம். ஆளுநருக்கு எதிராக, அதிமுகவினர் பதாகைகளுடன் வந்தனர். எழுதிக் கொடுப்பதை வாசிப்பது மட்டும் தான் ஆளுநரின் வேலை, கோரிக்கை எதுவும் வைக்க  முடியாது. ஆளுநர் ஆர்.என். ரவி, ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டது  மக்களையும், பேரவை உறுப்பினர்களையும் அவமானப் படுத்தும் செயல். ஆளுநரின் இந்தச் செயலை தமிழ்நாடு சட்டப்பேரவை வன்மையாக கண்டிக்கிறது. தேசிய கீதத்தை முதலில் பாட வேண்டும் என கோரிக்கை வைக்க ஆளுநருக்கு உரிமை இல்லை. ஆளுநர் உரையின் போது தூர்தர்ஷன் தொலைக்காட்சி மூலம் வெட்டி, ஒட்ட முயற்சி நடந்தது; வெட்டி,  ஒட்டுவார்கள் என முன்கூட்டியே கண்டு பிடித்ததால் தூர்தர்ஷன் தொலைக்காட்சிக்கு நேரலை தரப்படவில்லை. தூர்தர்ஷன் தொலைக்காட்சிக்கு நேரலை கொடுக்க ஆளுநர் தரப்பில் இருந்து  நெருக்கடி கொடுக்கப்பட்டது. தமிழக மக்களை ஆளுநர்  ஆர்.என். ரவி அவமதித்து விட்டார். இவ்வாறு சபாநாயகர் மு. அப்பாவு கூறினார்.

பாதிக்கப்பட்டவர்களை தரக்குறைவாக பேசிய காவல் கண்காணிப்பாளர்

உ.பி லக்கிம்பூரில் காவல் நிலை யத்தில் ராமச்சந்திரா என்ற  தலித் இளைஞர் ஒருவர் மர்ம மான முறையில் இறந்துள்ளார். அந்த இளைஞரின் தந்தை மகனுக்கு  நீதி  கேட்டு போராடி வரும் நிலையில் பேச்சு வார்த்தைக்கு சென்ற உதவி காவல் கண்காணிப்பாளர் பி.பி. சிங்  பாதிக் கப்பட்டவர்களை மிகத் தரக்குறைவாக பேசியுள்ளார். காவலர்கள் யாரையும் இடைநீக்கம் செய்யமுடியாது. உயிரிழப்புக்கு இழப்பீடு தரமுடியாது. எத்தனைநாட்கள் வேண்டுமானாலும் பிணத்தை வைத்துக் கொள்ளுங்கள். உங்களால் முடிந்ததை செய்து கொள்ளுங்கள் எனவும் மிரட் டிள்ளார்.

கோரிக்கைகள் புறக்கணிப்பு ஜம்மு-காஷ்மீர்  அரசு ஊழியர்கள் போராட்டம்

ஜம்மு-காஷ்மீரில் தங்களது நீண்ட காலக் கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தி அரசு ஊழி யர்கள் சங்கம் ஜனவரி 17-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் நிர்வாகத்தை மேற்கொண்டுள்ள துணை நிலை ஆளுநர்  2023-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அரசு ஊழியர்கள் (நடத்தை) விதி கள், 1971- விதி 20 (ii) ஐ- செயல் படுத்தினார். இந்த விதியின்படி எந்த அரசு ஊழியரும் தங்களது கோரிக்கை சார்ந்த பிரச்சனைகளுக்காக வேலை நிறுத்தம் உட்பட எந்தவகையான போராட்டங்களிலும் ஈடுபடக்கூடாது எனக் கூறியிருந்தார். உத்தரவு போட்ட துணை நிலை ஆளுநர் அரசு ஊழியர்களின் கோரிக்கை களை நிறைவேற்ற முன்வரவில்லை. இந்த நிலையில் ஆளுநரின் போக்கைக் கண்டித்து அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி, அரசு ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் ஆகியோர் பெறும் சம்பளத்தில் உள்ள முரண்பாடுகளைக் களைய வேண்டும். பொது வருங்கால வைப்பு நிதியை செலுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை அரசாங்கம் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. பலமுறை பேசியும் அரசு எந்த பதிலை யும் அளிக்கவில்லை. இதனால் அரசு ஊழியர்கள் போராட்டத்தை அறி வித்துள்ளனர். 

நால்கோ (NALCO) நிறுவனத்தில் 518 பணியிடங்கள் 

ஐடிஐ/ டிப்ளோமா (ITI /DIPLOMA) படித்தவர்களுக்கு புவனேஸ்வரில் உள்ள நால்கோ (NALCO) நிறுவனத்தில் 518 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஜனவரி 21, 2025 தேதியின் படி 27 வயதுக்குள்                                                                                                                                       இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அரசு விதித்துள்ள தளர்ச்சி உண்டு.  தகுதியானவர்கள் ஆன்லைன்,எழுத்துத் தேர்வு,நேர்முகத் தேர்வு மற்றும் குழு விவாதம் ஆகியவற்றில் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.12,000உதவித்தொகையுடன் ஒரு வருட பயிற்சி அளிக்கப்பட்டு பின்னர் பணி வழங்கப்படும். www.nalcoindia.com என்ற இணையதளத்தின் வழியாக கூடுதல் விபரங்களை அறிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி ஜனவரி 21,2025 ஆகும்.

எச்.எம்.பி.வி. தொற்றுக்கு பிரத்யேக சிகிச்சை இல்லை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்

சென்னை, ஜன. 8 - எச்.எம்.பி.வி. தொற்று குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவை யில் விளக்கம் அளித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், எச்.எம்.பி.வி. வைரசுக்கு அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை  என்றார். தொடர்ந்து பேசிய அவர், சீனாவில் பரவி வரும் எச்.எம்.பி.வி. வைரஸ் 50 ஆண்டுகளுக்கு முன்பு கண்டறி யப்பட்டது. இந்த வைரசால் தமிழகத்தில் பாதிக்கப்பட்ட இருவர் நலமுடன் உள்ளனர். எச்.எம்.பி.வி. தொற்று குறித்து அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை. காய்ச்சல், சளி பாதிப்புள்ளோர் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது நல்லது. ‘எச்.எம்.பி.வி. வைரஸ் சாதாரணமான ஒன்றுதான்; வீரியத் தன்மை உள்ள வைரஸ் இல்லை. இதற்கென பிரத்யேக மருந்துகளும் இல்லை. பிரத்யேக சிகிச்சையும் இல்லை. 4 அல்லது 5 நாட்களில் அதுவாகவே சரியாகி விடுகிறது. பெரிய அளவில் பயப்படத் தேவையில்லை என்றும் அவர் கூறினார்.

ஜன. 18 - திருச்சியில் தொகுப்பூதிய ஒழிப்பு மாநாடு! சத்துணவு ஊழியர் சங்கம் நடத்துகிறது

சென்னை, ஜன. 8 - சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில், ஜனவரி 18 அன்று திருச்சியில், தொகுப்பூதிய ஒழிப்பு மாநாடு நடைபெறுகிறது. சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் செவ்வாயன்று (ஜன.7) சென்னையில் மாநிலத் தலைவர் ஆர். கலா தலைமையில் நடைபெற்றது. சங்கத்தின் பொதுச்செயலாளர் அ. மலர்விழி, பொரு ளாளர் எம்.ஆர். திலகவதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில், “சத்துணவுத் திட்டத்தில் 8 ஆயிரத்து 997 சமையல் உதவியாளர்களை நியமிக்க உள்ளதை வரவேற்கிறோம். அதேசமயம், கொத்தடிமை ஊதியமாக 3 ஆயிரம் ரூபாய் நிர்ணயித்துள்ளதை மறுபரி சீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம்” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. “சத்துணவு திட்டத்தில் உள்ள அனைத்து காலிப் பணியிடங்களையும், காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும்; 2021 தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிப்படி, சத்துணவு ஊழியர்களை அரசு  ஊழியராக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி ஜனவரி 18 அன்று திருச்சியில் தொகுப்பூதிய ஒழிப்பு சிறப்பு மாநாட்டை நடத்துவது” என்றும் இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 24 மணி நேர உண்ணாநிலை முன்னதாக, “தொகுப்பூதியம் ஒழிக்கப்பட வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியத்தை மாற்றி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், 9 ஆயிரம் ரூபாய் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு பணிக்கொடையாக 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும், 63 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், உணவு ஊட்டுச் செலவினத்தை, ஒரு குழந்தைக்கு 5 ரூபாயாக நிர்ணயித்து வழங்க வேண்டும்; சமூகத் தணிக்கையை கைவிட வேண்டும்; ஏற்கெனவே நடைமுறையில் இருந்த உள்ளாட்சி தணிக்கையை அமல்படுத்த வேண்டும். காலைச் சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 29 அன்று சென்னையில் உள்ள சமூக நலத்துறை இயக்குநர் அலுவலகம் அருகில் மாநில நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்கும் 24 மணி நேர உண்ணா நிலை போராட்டம் நடைபெறும்” என்றும் அறிவிக்கப்பட்டது. அதேநாளில், மாநிலம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.