states

img

திகார் சிறைக்குள் அமைச்சருக்கு மசாஜ்!

தில்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு, திகார் சிறைக்குள் மசாஜ் அளிக்கப்படும் சிசிடிவி வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த 2017-ல், ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அவரை அமலாக்கத் துறை கடந்த மே 30-ஆம் தேதி கைது செய்தது. இதை அடுத்து, சத்யேந்திர ஜெயின் மற்றும் அவருடன் கைது செய்யப்பட்ட இருவர் ஆகியோர் ஜாமீன் கோரி தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறையில் சத்யேந்திர ஜெயின் விதிகளை மீறி சொகுசு வசதிகளை அனுபவித்து வருவதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியது. இதனை அடுத்து, ஜாமீன் மனுவை தில்லி சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், சத்யேந்திர ஜெயினுக்கு சிறப்பு சலுகை அளித்த புகாரில் திகார் சிறையின் கண்காணிப்பாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில், அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு, திகார் சிறைக்குள் மசாஜ் அளிக்கப்படும் சிசிடிவி வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இது தொடர்பாக தில்லி துணை முதல்வர் சிசோடியா கூறுகையில்,  சத்யேந்திர ஜெயினுக்கு முதுகுத் தண்டில் ஏற்பட்ட காயம் காரணமாக 2 முறை அறுவை சிகிச்சை செய்துள்ளதாகவும், சிறையில் பிசியோதெரபி சிகிச்சை கொடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளார்.