மத்திய பிரதேசத்தில் இரு ராணுவ வீரர்களை தாக்கி, அவர்களுடன் சென்ற பெண்ணை துப்பாக்கி முனையில் மர்ம கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள ஜாம் கேட் சுற்றுலாத் தலத்துக்கு இரண்டு ராணுவ வீரர்கள் தங்களின் பெண் நண்பர்கள் இருவருடன் நேற்று இரவு சென்றுள்ளனர்.அப்போது இருவர் மலை உச்சிக்கு செல்ல, இருவர் காரிலேயே இருந்தனர்.
இன்று அதிகாலை 2.30 மணியளவில், அடையாளம் தெரியாத 6-7 பேர் அடங்கிய கும்பல் ஒன்று மோவ் - மண்டலேஸ்வர் சுற்றுலா தலத்தின் சாலை அருகே வந்து காரில் இருந்த ராணுவ அதிகாரி மற்றும் அவரது பெண் தோழியை சராமாரியாக தாக்கத் தொடங்கியது. அந்தச் சலசலப்பு சத்தம் கேட்டு மலை உச்சிக்குச் சென்றிருந்த மற்றொரு ராணுவ அதிகாரியும் தோழியும் தாக்குதல் நடந்த இடத்துக்கு வந்தனர்.
அதில், ஒரு பெண்ணை மட்டும் துப்பாக்கி முனையில் காரில் பிணைக் கைதியாக பிடித்துக் கொண்டு ரூ. 10 லட்சம் எடுத்து வருமாறு மற்றவர்களிடம் கூறியுள்ளனர். இதனிடையே, உடனடியாக ராணுவத்தின் உயர் அதிகாரிக்கு சம்பவம் குறித்து தகவலை பகிர்ந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, காவல்துறையினருக்கு ராணுவம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்துக்கு போலீஸ் விரைந்துள்ளனர். ஆனால், அதற்குள் காருக்குள் இருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அந்த கும்பல் பேரும் காட்டுக்குள் தப்பி ஓடிவிட்டனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த 4 பேரையும் காவல்துறையினர் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவர்களின் சோதனையில், அந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டதாக காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்துள்ளனர். மேலும், தப்பி சென்றவர்களை தேடி வருகின்றனர்.