கேரளத்தில் என்.பி.ஆர் நடைமுறைப்படுத்தப்படாது என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
"இடது ஜனநாயக முன்னணி (LDF) அரசு, தேசிய மக்கள் பதிவேட்டை (NPR) எந்த சூழ்நிலையிலும் கேரளத்தில் நடைமுறைப்படுத்தப்படாது என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் 2027-இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், 2019 முதல் நாங்கள் எடுத்துள்ள உறுதியான நிலைப்பாட்டை நிலைநிறுத்தி, கேரளத்தில் என்.பி.ஆர் பணிகளுக்காக எந்தத் தரவும் சேகரிக்கப்படாது என்பதை உறுதிசெய்யும் ஒரு புதிய அறிவிப்பை நாங்கள் வெளியிட்டுள்ளோம்.
அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணான சிஏஏ-வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அதற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய முதல் மாநிலம் கேரளம்தான். என்.பி.ஆர்/ என்.ஆர்.சி போன்ற பாகுபாடான செயல்முறைகள் மூலம் எங்கள் மக்களை அச்சுறுத்த அனுமதிக்கமாட்டோம்; அரசியலமைப்புச் சாசனத்தின் விழுமியங்களை பாதுகாக்க நாங்கள் உறுதியுடன் தொடர்ந்து செயல்படுவோம்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
