states

img

சிறை என்று சொல்லி கம்யூனிஸ்டுகளை அச்சுறுத்த முயற்சிக்காதீர்.... கேரள சட்டமன்றத்தில் பினராயி விஜயன் பதிலடி....

திருவனந்தபுரம்:
சிறைக்கு அனுப்பப்படுவீர்கள் என்று சொல்லிகம்யூனிஸ்டுகளை அச்சுறுத்த முயற்சிக்க வேண்டாம் என்று கேரள சட்டமன்றத்தில் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் பதிலடி கொடுத்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு பதவியேற்றதில் இருந்து தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த 600 வாக்குறுதிகளில் 570 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இத்தனைக்கும் ஒக்கி புயல், நிபா வைரஸ், 2018ல் பெரு வெள்ளம், தற்போது கோவிட்-19 என்று எந்த மாநிலமும் சந்திக்காத அளவுக்கு அதிகமான பிரச்சனைகளையும் கேரளம் சந்தித்தது. இவற்றையெல்லாம் மீறி அரசு சாதித்துள்ளதால் மீண்டும் இடது ஜனநாயக முன்னணி அரசே வரும் தேர்தலுக்குப் பிறகுஆட்சியமைக்கும் என்று மக்கள் மத்தியில் கருத்துஎழுந்துள்ளது.

இந்நிலையில், அரசு மீது தவறான பிரச்சாரத் மேற்கொள்ள சட்டமன்றத்தைப் பயன்படுத்தும் வகையில் ஒத்திவைப்புத் தீர்மானத்தை காங்கிரஸ் கொண்டு வந்தது. அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பி.டி.தாமஸ் இதை அவை முன்வைத்தார். அப்போது பேசிய அவர் பல்வேறு தவறான செய்திகளை முன்வைத்ததோடு, முதல்வரின் குடும்பம் பற்றியும் கருத்துகளை வெளியிட்டார். தீர்மானத்தின் போது காங்கிரஸ் சார்பில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களுக்கு பதிலளித்து முதல்வர் பினராயி விஜயன் பேசினார்.

அச்சுறுத்த வேண்டாம்
“நான் சிறைக்குப் போவது என்பதெல்லாம் வெறும் கற்பனைதான். அனைத்து புலனாய்வு அமைப்புகளும் சேர்ந்து இதுவரை நடத்தியுள்ள விசாரணைகளில் இந்த அரசு தவறு செய்திருப்பதாக தெரிவிக்கவில்லை. சொல்லப்போனால், தங்கக்கடத்தல் விவகாரத்தில் மாநிலஅரசுதான் ஆழமான விசாரணை மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. சிறை என்று சொல்லி கம்யூனிஸ்டுகளை அச்சுறுத்த முயற்சிக்காதீர். எங்கள் கரங்கள் சுத்தமாக உள்ளன.காங்கிரஸ் சார்பில் தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ள பி.டி.தாமஸ் பினராயி விஜயனை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. எதிர்க்கட்சித் தலைவராலும் அவரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

ஏனென்றால் கட்சிக்குள் அவர் வேறொரு கோஷ்டியைச் சேர்ந்தவர். இதில் தொடர்புடையவர் இல்லை என்றாலும் கே.சி.ஜோசப்(மற்றொரு கோஷ்டியின் தலைவர்களில் ஒருவர்) அவரைக் கட்டுப்படுத்தியிருக்கலாம். சட்டமன்றத்தில் இந்தப் பிரச்சனையை எழுப்புவதன் நோக்கமே என்னுடைய குடும்ப உறுப்பினர்களை இதில்இழுத்து, தேவையற்ற சர்ச்சையை உருவாக்குவதேயாகும். மத்திய புலனாய்வுத்துறை அமைப்புகளால் விசாரிக்கப்பட்டு வரும் வழக்கை அரசியல் பிரச்சனையாக மாற்ற பி.டி.தாமஸ் முயற்சிக்கிறார். என்னுடைய மகளின் திருமணம் நடந்த மண்டபம்அனைவருக்கும் தெரிந்த இடமாகும். அந்த நிகழ்ச்சியில் சுவப்னா சுரேஷ் ஒருபோதும் கலந்து கொள்ளவில்லை. என்னுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர் யாரும் எந்த புலனாய்வு அமைப்பாலும் விசாரிக்கப்படவில்லை. பணத்துக்கு விழும் ஆட்களில் ஒருவர் அல்ல நான்.

எந்தவிதமான கோபங்களை வெளிப்படுத்துவதற்கான இடமாக சட்டமன்றத்தை மாற்றக்கூடாது. என்னை லாவலின் வழக்கில் சிக்கவைக்க பல முயற்சிகள் நடந்தன. என்னுடைய கரங்கள் சுத்தமாக இருந்ததால்தான் இப்படி என்னால் தற்போது பேச முடிகிறது. சில சம்பவங்கள் நடந்தபோது நாள் சிவசங்கர் மீது நடவடிக்கையைத் துவக்கினேன். சி.வி.ரவீந்திரன்  எந்த வழக்கிலும் குற்றம் சாட்டப்படவில்லை. எதிர்க்கட்சிகள் திரும்பிப் பார்த்தால், யாருடைய ஆட்சிக்காலத்தில் அவர் மின்சார வாரியத் தலைவராக ஆக்கப்பட்டார் என்றும், ஏ.கே.அந்தோணி முதல்வராக இருந்தபோதுதான் அவருக்கு ஐ.ஏ.எஸ். அந்தஸ்து வழங்கப்பட்டது என்றும் நினைவுக்கு வரும்.”இவ்வாறு பினராயி விஜயன் பேசினார்.