திருவனந்தபுரம்:
சித்ராஞ்சலி ஸ்டுடியோவை சர்வதேச அளவில் நவீனமயமாக்க முடிவு செய்த மாநில அரசுக்கு மலையாளத் திரை உலகின் உச்ச நட்சத்திரங்கள் மோகன்லாலும் மம்முட்டியும் வாழ்த்து தெரிவித்தனர்.
காணொலிச் செய்தி மூலம் தங்களது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் இருவரும் தெரிவித்துள்ளனர். சித்ராஞ்சலியுடன் தனக்கு உணர்ச்சிப்பூர்வமான தொடர்பு இருப்பதாக மோகன்லால் கூறினார். தனது முகத்தை முதன்முதலில் பதிவு செய்த ‘திரநோட்டம்’ இங்குதான் தயாரிக்கப்பட்டது. ஆரம்பகால படங்களில் பெரும்பாலானவை சித்ராஞ்சலியின் தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டவையாகும். உலகின் மிகச்சிறந்த ஸ்டுடியோக்களில் ஒன்றாக மாற்றப்படுவதில் மகிழ்ச்சி அடைவதாகவும், இதை சாத்தியமாக்கிய முதல்வர் பினராயி விஜயன், அமைச்சர்கள் ஏ.கே.பாலன் மற்றும் டி.எம். தாமஸ் ஐசக் ஆகியோரை மோகன்லால் வாழ்த்தினார்.
சித்ராஞ்சலியின் நவீனமயமாக்கலின் நோக்கம் திரைப்படத் தயாரிப்பை ஒரே குடையின் கீழ் கொண்டுவருவதாகும் என்று மம்முட்டி கூறினார். இத்தகைய முயற்சிகள் பெருந்தொற்று காலத்தில் முக்கியத்துவம் பெற்றன. இது திரை உலகத்திற்கு மிகப்பெரிய அளவில் உதவும். அரசாங்கத்தின் முன்முயற்சிகள் அனைத்தும் சிறப்படையட்டும் என்று மம்முட்டி கூறினார். சித்ராஞ்சலியின் நவீனமயமாக்கல் அரசாங்கத்தின் தொலைதூர பார்வையின் விளைவாகும் என்று இயக்குநர் ஷாஜிஎன்.கருண் கூறினார். இந்த செயல் மலையாள சினிமா வரலாற்றில் குறிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.