திருவனந்தபுரம்:
தடுப்பூசி போட்டுக் கொள் வதற்கு முன்பே, இரத்த தானம் செய்ய முன்வருமாறு, 18 முதல் 45 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார்.
திங்களன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தபோது, இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது:
ரத்த வங்கிகளில் ரத்தப் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று எதிர்க்கட்சித் தலைவர் அனைத்துக் கட்சி கூட்டத்தில் சுட்டிக் காட்டியிருந்தார். பிரச்சனை என்னவென்றால், கொரோனா பரவும் சூழ்நிலையில் பொதுவாக இரத்த தானம்செய்ய மக்கள் முன்வருவதில்லை. எனவே, தடுப்பூசி பெறுவதற்கு முன்பு இரத்ததானம் செய்யத் தயாராக இருக்குமாறு இளைஞர்களை அரசாங்கம் வலியுறுத்துகிறது. தடுப்பூசி பெற்றபிறகு ஒருமாதத்திற்கு இரத்தம் கொடுக்கக்கூடாது என்ற நிபுணர் களின் கூற்றைக் கருத்தில் கொண்டே, தடுப்பூசிக்கு முன் இரத்த தானம் செய்யுமாறு பரிந்துரைக்கப்படுகிறது. ரத்ததானத்திற்கு சிறப்பு நடவடிக்கை எடுக்க இளைஞர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளும் தயாராக வேண்டும்.
கொரோனா இரண்டாவது அலையின் பின்னணியில் விரிவான தன்னார்வப் பணிகளை மேற்கொள்ளத் தயாராகஇருப்பதாக அரசாங்கத்திற்கு டிஒய்எப்ஐ தெரிவித்துள்ளது. பிளாஸ்மா தானப் பிரச்சாரம், ஒரு சிறப்பு இரத்த தான முகாம்மற்றும் கொரோனா பாதுகாப்பு படை உருவாக்கம் ஆகியவற்றை தொடங்க டிஒய்எப்ஐ விரும்பம் தெரிவித்துள்ளது.சமூக விழிப்புணர்வுக்கு மக்களே முன்னிலை வகிக்க வேண்டும். நாம் சமூக உணர்வுள்ள மக்கள். அந்த வகையில், நாம் முன்பே நிரூபித்தபடி, ஒவ்வொரு குடிமகனும் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து தானாகவே முன்முயற்சி எடுத்து கொரோனாவை முறியடிப்போம்.இவ்வாறு பினராயி விஜயன் கூறியுள்ளார்.