மூத்த பத்திரிகையாளர் அபிசார் சர்மாவை கைது செய்யக் கூடாது! உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை
அசாம் மாநிலத்தில் பழங்குடியி னரின் 991 ஏக்கர் நிலத்தைத் தனியாருக்கு தாரை வார்த்து, ஆளும் பாஜக அரசு பிரிவினை அரசியலை செய்து வருவதாக மூத்த பத்திரிகையாளர் அபிசார் சர்மா யூடியூப் பேட்டியில் விமர்சித்திருந்தார். இதற்காக அவர் மீது அசாம் பாஜக அரசு வழக்கு பதிவு செய்து, கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இந்நிலையில், அசாமில் பதிவு செய்துள்ள வழக்கை ரத்துச் செய்யக் கோரி அபிசார் சர்மா தாக்கல் செய்த மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், என்.கே. சிங் அமர்வு விசாரித்தது. அப்போது, பிரச்சனை தொடர்பாக கவுகாத்தி உயர் நீதி மன்றத்தை நாடுமாறு அறிவுறுத்திய நீதிபதிகள், முன்னதாக அபிசார் சர்மா-வை கைது செய்யக் கூடாது என்று இடைக்காலத் தடை விதித்தனர். நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்து விளைவித்ததாகப் பதிவு செய்த வழக்குப் பிரிவை எதிர்த்த மனுவுக்குப் பதில் அளிக்கவும் ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டனர்.