இயற்கையின் எச்சரிக்கையை புறந்தள்ளிய மாநில அரசுகள்
இமயமலையின் அடிவாரத்தில் அமைந் துள்ள உத்தரகண்ட், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு- காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் வழக்கமான பருவமழை கடந்த சில ஆண்டுகளாக பெரும் துயரமாக மாறி வருகின்றது. இமயமலையில், சுமார் 10,000 பனிப்பாறைகள் கடந்த 100 ஆண்டு களாக படிப்படியாக உருகி வருகின்றன. இவை பெரும்பாலும் பனிப்பாறை ஏரிகளை உருவாக்குகின்றன. பின்னர் அவை அவற்றின் கரைகளை படு பயங்கரமான முறையில் உடைத்து, பள்ளத்தாக்கை நோக்கிப் பாய்கின்றன. 2023 ஆம் ஆண்டு ஜோஷிமத் மற்றும் சுங்தாங் ஆகிய இரட்டைப் பேரழிவுகளுக்குப் பிறகும், உத்தரகண்ட் மாநில அரசும் ஒன்றிய அரசும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை. ஜோஷிமத்தில் ஐந்தில் ஒரு பங்கு வீடுகள் வசிக்கத் தகுதி யற்றவையாக மாறின.
இம் மாநிலத்தின் கங்கோத்ரி பள்ளத்தாக் கின் மிக உயரமான கிராமமான தரலியில் சமீபத்தில் ஏற்பட்ட துயரம் அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தால் ஏற்பட்டது. ஏனெனில் இமய மலையை ஒட்டிய பகுதிகளில் திட்டமிடப் படாத வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆற்றின் ஓரங்களில் எந்த வித விதிமுறைகளையும் பின்பற்றாமல் ஏராளமான சுற்றுலா விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. ஆட்சி யாளர்கள் மற்றும் அதிகார வர்க்கத்தின் ஆசி இல்லாமல் அந்த கட்டடங்கள் முளைத்திருக்க முடியாது. மேக வெடிப்பு போன்ற வார்த்தைகளை நாம் இதற்கு முன்பு கேட்டதில்லை. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த வார்த்தையை நாம் அடிக்கடி கேட்கிறோம். உத்தரகண்ட் மாநி லத்தில் கடந்த 5 ஆம் தேதி பனிப்பாறை ஏரி உடைந்து அழகிய ஹர்சில் பள்ளத்தாக்கு அழிந்துபோனது. ஒரு நிமிடத்தில் பெரிய பெரிய கட்டடங்கள் சேற்றில் மறைந்தன.
யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் ஆகிய நான்கு புனிதத் தலங்களை (சார் தாம்) பெரிய சாலைகள் வழியாக இணைக்கப் போகிறேன் என்று ஒன்றிய அரசு அவசர கதியில் மேற்கொண்டு வரும் சாலைத் திட்டங்களும் இயற்கைச் சீற்றத்திற்கு காரணமாக அமைந்துள் ளதாக புவியியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். சார்தாம் திட்டத்தில் மட்டும் 900 கி.மீ பாதையில் 811 இடங்கள் நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன.
சுற்றுச்சூழல் பரிசீலனைகளைப் புறக்க ணித்து கங்கைப் படுகையில் மட்டும் சுமார் 70-க்கும் மேற்பட்ட நீர் மின் திட்டங்கள் திட்டமிடப்பட்டுள் ளன.இவற்றில் 3இல் 2 பங்கு இன்னும் கட்டப் படவில்லை. அணைகள் கட்டினால் அது நதியின் ஓட்டத்தில் கிட்டத்தட்ட 80 சதவீதத்தை பாதிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். எனவே அண்மையில் ஏற்பட்ட பேரழிவுக்கு பிறகும் ஒன்றிய, மாநில அரசுகள் பாடம் கற்றுக்கொள்ள வில்லை என்றால் வருங்காலத்தில் இதைவிட பலமடங்கு பேரழிவை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.