தில்லி அரசு இல்லத்தில் இருந்த முதலமைச்சர் அதிஷி உடமைகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அகற்றி சீல் வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த நிலையில், உச்சநீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. இருப்பினும் தில்லி முதலமைச்சர் அலுவலகம் செல்லும் கோப்புகளில் கையெழுத்திடவும் தடை விதிக்கப்பட்டது. இதை அடுத்து, அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து, தில்லி அமைச்சரவை ஒப்புதலின் பேரில், அதிஷி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டு, செப்டம்பர் 21-ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டார்.
முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால், அரசு இல்லத்தையும் காலி செய்த பின்னர், கடந்த இரு தினங்களுக்கு முன்பு அதிஷி அங்கு குடியேறினார். இந்த சூழலில், அங்கிருந்த அதிஷியின் உடமைகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அகற்றியது மட்டுமல்லாமல் அரசு இல்லத்துக்கு சீல் வைத்துள்ளனர்.
இந்த நடவடிக்கையின் பின்னணியில் துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா இருப்பதாக முதலமைச்சர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.