states

img

தமிழகத்தில் பலத்த மழையால் 13,749 ஹெக்டேரில் பயிர்கள் நீரில் மூழ்கின

தஞ்சாவூர், நவ.28 -  தமிழகத்தில் பெய்த பலத்த மழை காரணமாக 13 ஆயிரத்து 749 ஹெக்டேரில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன என்று வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.  தஞ்சாவூர் அருகே அம்மா பேட்டை உக்கடை, நெய்வாசல் தென்பாதி உள்ளிட்ட இடங்களில் பலத்த மழையால் பயிர்கள் மூழ்கிக்கிடக்கும் பகுதிகளில் வியாழக்கிழமை ஆய்வு செய்த அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: தமிழகத்தில் பலத்த மழை காரணமாக 13 ஆயிரத்து 749 ஹெக்டேர் அளவுக்கு பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 947 ஹெக்டேரில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. பயிரின் தன்மையைத் தொடர்புடைய துறை அலுவலர்கள், மாவட்ட நிர்வாகத்தினர் கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். மழை நின்ற பிறகு தண்ணீர் வடிவதைப் பொறுத்து 33 சதவீத அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அதற்குரிய இழப்பீடு வழங்குவதற்காகக் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அம்மாபேட்டை உக்கடை கிராமத்தில் தண்ணீர் வடியாத காரணத்தால் பயிர்கள் மூழ்கியுள்ளன. நாகை மாவட்டத்தில் 7 ஆயிரத்து 681 ஹெக்டேரிலும், தஞ்சாவூர், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் 3 ஆயிரத்து 300 ஹெக்டேரிலும், திருவாரூர் மாவட்டத்தில் 958 ஹெக்டேரிலும், இராமநாதபுரம் மாவட்டத்தில் 822 ஹெக்டேரியிலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 35 ஹெக்டேரிலும் பயிர்கள் மூழ்கியிருப்பதாக முதல் கட்டத் தகவல் வந்துள்ளது. தற்போது மழை நின்றுள்ளதை தொடர்ந்து வயல்களில் தேங்கியுள்ள தண்ணீர் வடிந்து வருகிறது. வடிந்து செல்லாதபட்சத்தில் தண்ணீர் தேங்கும்போது பயிர்கள் பாதிக்கப்படும். வடிந்துவிட்டால் பயிர்கள் பாதிப்பு தன்மையிலிருந்து மீண்டு விடும். சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்களில் வழக்கமாக கிராம மக்கள் பராமரிப்பு செய்வர். தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு வேளாண்மைக்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்து, தொடர்ந்து 3 ஆண்டுகளாக படிப்படியாக சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்களைத் தூர் வாரி வருகிறோம். காவிரி டெல்டா பகுதியில் கடந்த கோடைகாலத்தில் அதிக அளவில் தூர் வாரும் பணி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.  இதில் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன், மாநிலங்களவை உறுப்பினர் எஸ். கல்யாணசுந்தரம், மாவட்டக் கண்காணிப்பு அலுவலர் எம். அரவிந்த், மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம், திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் துரை. சந்திரசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.