states

img

விசாகப்பட்டினம் உருக்காலையை தனியாருக்கு விற்கும் மோடி அரசு.... நிதித்துறை நிர்வாக இயக்குநரை 6 மணி நேரம் சிறைப்பிடித்து தொழிலாளர்கள் எதிர்ப்பு....

விசாகப்பட்டினம்:
ஆந்திரப் பிரதேச மாநிலம், விசாகப்பட்டினத்திலுள்ள பொதுத்துறை உருக்காலையை (Visakhapatnam Steel Plant - VSP) தனியார்மயமாக்கும் மத்திய பாஜக அரசின் நடவடிக்கைக்கு எதிராக, தொழிலாளர்கள் போராட்டக்களத்தில் இறங்கியுள்ளனர்.
2020-21 நிதியாண்டில், பொதுத் துறை நிறுவனங்களில் அரசுக்கு உள்ள பங்குகளை விற்று ரூ. 2 லட்சத்து 10 ஆயிரம் கோடி நிதி திரட்டுவதென மோடி அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், கொரோனா தொற்று- பொதுமுடக்கம் உள்ளிட்டகாரணங்களால் அது நிறைவேறவில்லை.எனினும் கடந்த பிப்ரவரி 1 அன்று 2021-22 நிதியாண்டிற்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்த நிதியாண்டில், அரசுப் பங்குகளை விற்று ரூ. 1 லட்சத்து75 ஆயிரம் கோடி நிதி திரட்ட புதியஇலக்கு நிர்ணயித்துள்ளதாக தெரிவித்தார். 

பாரத் பெட்ரோலியம் (BPCL), ஏர் இந்தியா (Air India), ஐடிபிஐ வங்கி, ஷிப்பிங் கார்ப்பொரேஷன் ஆப் இண்டியா (SCI), இந்திய காட்டன் கார்ப்பரேஷன் (CCI) உள்ளிட்ட நிறுவனங்கள் தனியார்மய பட்டியலில் ஏற்கெனவே இருக்கும் நிலையில், விசாகப்பட்டினம் உருக்கு தொழிற்சாலையை தனியாருக்கு விற்கும் திட்டமும் இருப்பதாக நாடாளுமன்றத்தில் செவ்வாயன்று நிர் மலா சீதாராமன் அறிவித்தார். மத்திய உருக்கு அமைச்சகத்தின்கீழ் உள்ள, ராஷ்டிரிய இஸ்பத் நிகம்லிமிடெட் (Rashtriya Ispat Nigam Limited - RINL) எனப்படும் ஒருங்கிணைந்த உருக்காலை நிறுவனத்தின்கீழ்தான், விசாகப்பட்டினம் உருக் காலை இயங்கி வருகிறது. ஆண் டுக்கு 7.3 மில்லியன் டன் இரும்பை உற்பத்தி செய்து வருகிறது. 

இந்நிலையில், கடந்த 2021 ஜனவரியிலேயே, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (Cabinet Committee of Economic Affairs- CCEA) கூடி, ஆர்ஐஎன்எல் நிறுவனத்தின் கீழுள்ளஅரசாங்கத்தின் பங்குகளை 100 சதவிகிதம் தனியாருக்கு விற்பனை செய்ய ‘கொள்கையளவில்’ ஒப்புதல் அளித்தது. ஆர்ஐஎன்எல் நிறுவனத்திற்கு 2018-19 நிதியாண்டு வரையிலான கணக்குப்படி மட்டும் ரூ.19 ஆயிரத்து592 கோடி கடன் இருக்கிறது. இந்நிலையில், இந்த கடனைக் காரணம்காட்டியே மத்திய அரசு தனியார்மயமுடிவை எடுத்தது. இதற்கு உடனடியாக எதிர்ப்புகளும் எழுந்தன. குறிப்பாக, விசாகப்பட்டினம் உருக்காலை தனியார்மயத்திற்கு, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி எதிர்ப்பு தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதமும் எழுதினார். தனியார்மயத்திற்குப் பதிலாக மாற்று வழிகளை ஆராயுமாறு அவர் கூறினார். விஎஸ்பி-க்குசொந்தமான ரூ. 1000 கோடி மதிப்பிலான நிலத்தை விற்பனை செய்வதற்கும் எதிர்ப்பு தெரிவித்தார்.ஆனால், ஜெகன்மோகனின் கடிதத்திற்குப் பின்னர்தான், தனியார்மய முடிவை நிர்மலா சீத்தாராமன்நாடாளுமன்றத்தில் உறுதிப்படுத்தினார். இந்த விவகாரத்தில் மாநில அரசுக்கு எந்த சம்பந்தமும் இல்லைஎன்று தெரிவித்தார். இது விசாகப்பட்டினம் ஆலைத் தொழிலாளர் களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆவேசமடைந்த அவர்கள்,கடந்த திங்களன்று இரவு குர்மன்னபலேம் பகுதியில் உள்ள ஆலையின் அலுவலகத்தை ஆயிரக்கணக்கில் கூடி முற்றுகையிட்டனர். ஆலையின் நிதித்துறை இயக்குநரான வெங்கட வேணுகோபால் ராவை செவ்வாயன்று பிற்பகல் 3 மணி வரை, சுமார் 6 மணிநேரத்திற்கும் மேலாக சிறைப்பிடித்தனர்.இதையடுத்து, சம்பவ இடத் திற்கு காவல்துறையினரும் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஆலையின் நிதித்துறை இயக்குநரை மீட்டனர்.முன்னதாக போராட்டத்தின் போது பேசிய சிஐடியு தலைவர்கங்கா ராவ், விஎஸ்பி ஆலை நிர்வாகம், மத்திய அரசின் செயல்பாடுகளை தொழிலாளர்களிடம் இருந்து மறைத்து மத்திய அரசின் ஏஜெண்ட் போல் நடந்து கொள்வதாக குற்றம் சாட்டினார். மேலும், மத்திய அரசுதனது விஎஸ்பி ஆலைத் தனியார்அறிவிப்பை திரும்பப் பெறாவிட் டால் போராட்டம் தீவிரமாக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

தற்போது காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு முடிவு செய்துள்ள தொழிலாளர்கள் இதுதொடர்பாக ஆலை நிர்வாகத்திற்கு நோட்டீஸ் வழங்கியுள்ளனர். இதன்படி மார்ச் 25க்கு பிறகுஎந்நேரமும் வேலைநிறுத்தம் துவங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.