லக்னோ, ஜன.31- விவசாயிகள் தங்களின் பயிர்களுக்கு உரிய விலையின்றித் தவிக்கும்போது, ஜின்னா, பாகிஸ்தான் என்று பேசி பாஜக தலைவர்கள் பிரச்சனையைத் திசைத் திருப்புகிறார்கள் என்று ‘பாரதிய கிஷான் யூனியன்’ தலைவர் ராகேஷ் திகாயத் குற்றம் சாட்டியுள்ளார். உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான இந்தி தொலைக்காட்சி விவாதத்தில் ராகேஷ் திகாயத் பங்கேற்றார். ‘விவசாயிகளின் முதல்வர் யார்?’ எனும் தலைப்பிலான அந்த விவாத மேடையின் பின்னணியில் ராமர் கோயில் படம் இடம் பெற்றிருந்தது. இதைக்கண்ட ராகேஷ் திகாயத், 5 மாநிலத் தேர்தலுக்கும், ராமர் கோயிலுக்கும் என்ன சம்பந்தம்? எதற்காக ராமர் படம் என்று நெறியாளரிடம் கேள்வி எழுப்பினார். “ராமர் கோயில் படம் இங்கு காண்பிக்கப்படுவது ஏன்?
யார் கூறி யதன் பேரில் இப்படம் இங்கு காட்டப்படுகிறது? நீங்கள் ஏன் இதை விளம்பரப்படுத்துகிறீர்கள்?” என்றதுடன், “உங்கள் தொலைக்காட்சி மத துவேஷத்தை கிளப்ப முயல்கிறது. பாபர் மசூதி-ராமர் கோயில் போன்ற படங்களுக்கு பதிலாக ஒரு மருத்துவ மனையின் படத்தைக் காட்டலாமே?” என்று காட்டமாக வினாக் களைத் தொடுத்தார். ராமர் படம் குறித்து, நெறியாளர் அளித்த விளக்கம் தனக்கு திருப்தி அளிக்காததால் விவாதத்திலிருந்தும் வெளியேறினார்.அதைத் தொடர்ந்து அவர் கூறியதாவது: மத நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிப்பதாக உ.பி. தேர்தல் பிரச்சாரத்தை பாஜக முன்னெடுக்கிறது. உ.பி. தேர்தலில் விவசாயிகள் பிரச்சனையும், வளர்ச்சித் திட்டங்கள் பற்றியும் பேசப்பட வேண்டும். இதை விடுத்து, முகம்மது அலி ஜின்னா, பாகிஸ்தான் என்றெல்லாம் பேசி, இந்து - முஸ்லிம்களை பிரிக்கும் வகையில் பிரச்சாரம் நடத்தப்படுகிறது. தங்கள் விளை பொருட்ளுக்கு உரிய விலையின்றி மின்சாரக் கட்டணம் செலுத்த முடியாமல் விவசாயிகள் அவதிக்கு உள்ளா கின்றனர். இளைஞர்கள் வேலை கிடைக்காமல் தவிக்கின்றனர். இவற்றை எல்லாம் பேசாமல், மத நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் பிரச்சாரம் செய்யும் கட்சிகளுக்கு இந்த தேர்தலில் வெற்றி கிடைக்காது. இவ்வாறு ராகேஷ் திகாயத் கூறினார்.