states

img

மேற்கு வங்கம் : பாஜகவின் பேரணி தோற்றது ஏன்?

இரண்டு லட்சம் பேரைத் திரட்டப் போகிறோம் என்று பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் மேற்கு வங்க பாஜகவினர் பேரணிக்கு ஏற்பாடு செய்தனர். எதிர்பார்த்த அளவுக்கு ஆட்கள் வராததால், காவல்துறையினர் மீது தாக்குதல்களை நடத்தி, ஒரு காவல்துறை வாகனத்தை எரித்து, கலவரம் நடத்தியிருக்கிறார்கள். பழியை காவல்துறையின் மீது போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
மாநிலத்தின் தலைமைச் செயலகத்தை நோக்கிப் பேரணி என்ற அறிவிப்பைப் பெரிய அளவில் விளம்பரப்படுத்திய பாஜகவினர், திரிணாமுல் கட்சியிடமிருந்து மேற்கு வங்கத்தைக் கைப்பற்றும் பெரிய இயக்கம் என்றும் சொல்லிக் கொண்டார்கள். மூன்று முனைகளில இருந்து பேரணிகள் கிளம்பி, தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவது என்றும், மாநிலம் முழுவதும் இருந்து 2 லட்சம் பேரைத் திரட்டுவது என்றும் அறிக்கைகள் ஊடகங்களில் வெளியாகின.
மாநிலம் முழுவதுமிருந்து ஆட்களைத் திரட்டவே செய்தனர். இருந்தாலும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் பத்து விழுக்காடு ஆட்கள் கூட வரமாட்டார்கள் என்ற நிலைமையைக் கண்டு பாஜக தலைவர்கள் அரண்டனர். நடிகர், நடிகைகள் பேரணிக்கு வரவில்லை என்று பின்வாங்கினர். சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி ஒப்புக்கு வந்து சென்றார். கூட்டம் குறைவுதான் என்று பெயர் சொல்ல விரும்பாத பாஜக தலைவர் ஒருவர் டெலிகிராப் பத்திரிகைக்கு தெரிவிக்கிறார்.
பேரணி தோல்வியுற்றதற்கான காரணங்களை அவர் அடுக்குகிறார்.  "நாங்கள் இதைவிட நன்றாகவே நடத்தியிருக்க முடியும். தலைவர்கள் மத்தியில் ஒருங்கிணைப்பு இல்லை. முறையான திட்டமே இல்லை. 10 கோடி ரூபாய் செலவாகியுள்ளது. ஆனால் அதற்கேற்ற ஆட்திரட்டல் இல்லை" என்கிறார். மூன்று முனைகளில் இரண்டு முனைகளுக்குத் தலைமை ஏற்பவர்கள் காலை வாரி விட்டனர். சுவேந்து அதிகாரி, வரும் வழியில் தன்னைக் கைது செய்து விட மாட்டார்களா என்ற எண்ணத்துடனே வந்தார். காவல்துறையைப் பார்த்தவுடன் தகராறு செய்து கைதாகி விட்டார்.
பாஜகவின் தேசிய துணைத்தலைவர் திலீப் கோஷ், மற்றொரு இடத்தில் இருந்து கிளம்பும் பேரணிக்குத் தலைமையேற்க இருந்தார். கண்ணீர்ப்புகைக் குண்டுகளை காவல்துறையினர் பயன்படுத்துகிறார்கள் என்றவுடன் களத்தில் இருந்து ஓடி விட்டார். என்ன தலைவர் இவர்? என்று பாதிப்புக்குள்ளான பாஜக தொண்டர்கள் அவரைச் சாடினர்.
இடதுசாரிகளின் எழுச்சி
கடந்த சில மாதங்களாகவே மக்கள் பிரச்சனைகளில் இடதுசாரிகளின் தலையீடுகள் பெரிய அளவில் இருந்து வருகின்றன. கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் செந்தொண்டர்கள் மக்களோடு, மக்களாகக் கலந்து உதவினர். கடுமையான ஊழல்கள் அம்பலமாகி வருவது ஒருபுறம், மறுபுறத்தில் கட்சிக்கு ஆள் சேர்க்கவே ரெய்டுகளை பயன்படுத்தும் பாஜகவின் உத்தி. மக்களின் குரல்களை ஒலிப்பவர்களாக இடதுசாரிகள் மாறினர். 
இந்த எழுச்சியும் பாஜகவின் தோல்விக்குக் காரணமாகியிருக்கிறது. 


கணேஷ்

செய்தி ஆதாரம் - தி டெலிகிராப்(செப்டம்பர் 14, 2022)
 

;