அனைத்து விவசாயிகள் சங்கங்களின் அறைகூவலான டிசம்பர் 8 பாரத் பந்த்தை மகத்தான முறையில் வெற்றி பெறச் செய்திட வேண்டும் என்று அகில இந்திய விவசாயிகள் சங்கம் கோரியுள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் அசோக் தாவ்லே மற்றும் பொதுச் செயலாளர் ஹன்னன் முல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
போராடும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை செவிமடுக்க மறுக்கும் ஆர்எஸ்எஸ்/பாஜக தலைமையிலான நரேந்திர மோடி அரசாங்கத்தின் அடாவடித்தனமான நிலைப்பாட்டைக் கண்டித்து, அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு, ராஷ்ட்ரிய கிசான் மகா சங்கம், பாரதிய கிசான் யூனியன் குழுக்கள் மற்றும் பஞ்சாப் கிசான் சங்கங்கள் ஒருங்கிணைந்த ‘தில்லி செல்வோம்-சம்யுக்த கிசான் மோர்ச்சா’ அமைப்பு, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நடந்துவரும் விவசாயிகள் போராட்டத்தை மேலும் தீவிரமாக்கும் விதத்தில் வரும் டிசம்பர் 8 அன்று ‘மக்கள் ஊரடங்கு/பாரத் பந்த்‘ அனுசரிக்குமாறு அறைகூவல் விடுத்துள்ளது.
கார்ப்பரேட் ஆதரவு வேளாண் சட்டங்கள் மூன்றும், ரத்து செய்யப்பட வேண்டும் என்றும், மின்சார திருத்தச் சட்டமுன்வடிவு, 2020 திரும்பப் பெறப்பட வேண்டும் என்றும் ‘சம்யுக்த கிசான் மோர்ச்சா’ ஒருமனதாகக் கருதுகிறது.
தொழிலாளர்கள், வர்த்தகர்கள், சிறு உற்பத்தியாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் உட்பட அனைத்துப் பிரிவு மக்களும் தங்கள் ஒருமைப்பாட்டை விரிவாக்கி, தோளோடு தோள்கொடுத்து, டிசம்பர் 8 அன்று ‘மக்கள் ஊரடங்கு/பாரத் பந்த்‘ மகத்தான முறையில் வெற்றிபெறச் செய்திட வேண்டும் என்றும் அதனை வரலாற்று சிறப்புமிக்க வெற்றியாக மாற்ற வேண்டும் என்றும் அகில இந்திய விவசாயிகள் சங்கம் கேட்டுக்கொள்கிறது.
விவசாயிகள் போராட்டத்திற்கு ஒருமைப்பாடு தெரிவிக்கும் விதத்தில் அனைத்துப் பிரிவு மக்களும் தாங்களாகவே முன்வந்து தங்கள் வாகனங்களை சாலைகளில் ஓட்டாமல் இருந்திட வேண்டும் என்றும், கடைகள் போன்றவற்றைத் திறக்காமல் இருந்திட வேண்டும் என்றும், உண்மையில் இது மக்கள் ஊரடங்கு என்று காட்டிட வேண்டும் என்றும் நாங்கள் அனைத்துப் பிரிவு மக்களையும் கேட்டுக்கொள்கிறோம்.
மக்கள் ஊரடங்கின் ஓர் அங்கமாக, விவசாயிகள் சங்கங்களின் முன்னணி ஊழியர்கள் அன்றைய தினம் சாலை மறியல், ரயில் மறியல் போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்துவார்கள்.
விவசாயிகள் டிசம்பர் 5 அன்று நாடு முழுவதும் அனைத்துக் கிராமங்களிலும் நரேந்திர மோடி அரசாங்கம் மற்றும் கார்ப்பரேட் கூட்டுக்களவாணிகள் அம்பானி, அதானி ஆகியவர்களின் கொடும்பாவிகளை எரிக்கிறார்கள். டிசம்பர் 5 அன்று நடைபெறும் அனைத்து சங்கங்களின் கூட்டத்தில் விவசாயிகள் சங்கங்களின் கோரிக்கையை அரசாங்கம் ஏற்காவிட்டால், விவசாய சங்கங்கள் நாட்டிலுள்ள அனைத்து சுங்க சாவடிகளின் முன்பும் அனைத்து வாகனங்களையும் சுங்கக் கட்டணம் இன்றி செல்வதற்கு அனுமதித்திடக்கூடிய விதத்தில் போராட்டம் விரிவாக்கப்படுகிறது என்றும், தில்லியை நோக்கி வரும் இதர நெடுஞ்சாலைகளில் ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், உத்தர்காண்ட் மற்றும் மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து பெருமளவில் விவசாயிகள் அணிவகுத்து வர வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டிருக்கிறது.
இவ்வாறு அகில இந்திய விவசாயிகள் சங்கம் அறிக்கையில் கோரியுள்ளது.
(ந.நி.