states

img

இரண்டு சரக்கு ரயில்கள் மோதி பயங்கர விபத்து

பஞ்சாப் மாநிலம், மாதேப்பூர் அருகே இரண்டு சரக்கு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது.

கடந்த ஆண்டு கொல்கத்தாவின் ஹவுராவில் இருந்து தமிழ்நாடு வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஒரிசாவில் பெரும் விபத்தில் சிக்கியது. இந்தியாவின் மிக மோசமான ரயில் விபத்தாக அறியப்படும் இந்த விபத்தில், சுமார் 296 பேர் வரை பலியாகினர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விபத்து நாட்டையே உலுக்கிய நிலையில், தற்போது அதே நாளில் பஞ்சாப் மாநிலத்தில் ரயில் விபத்து ஒன்று நடந்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் மாதோபூர் அருகே சிர்ஹிந்த் என்ற இடத்தில் இன்று காலை இரண்டு சரக்கு ரயில்கள் மோதிக்கொண்ட பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது. எதிர்பாராமல் நடந்த இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிர் சேதம் எதுவும் ஆகவில்லை. இரண்டு ரயில்களின் லோகோ பைலட்டுகள் மட்டும் காயமடைந்தனர். உடனடியாக இருவரும் மீட்கப்பட்டு, அருகிலிருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக பாட்டியாலாவில் உள்ள ராஜேந்திரா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக ரயில்வே காவல் துறையினர் கூறுகையில், சரக்கு ரயிலுக்காக கட்டப்பட்டுள்ள பாதையில் ஏற்கனவே நிலக்கரி ஏற்றி செல்வதற்காக 2 ரயில் பெட்டிகள் அங்கு நின்றுள்ளது. அதன் பின்புறம் சரக்கு ரயிலின் எஞ்சின் மோதியதில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.  மேலும், இந்த விபத்தில் ஒரு சரக்கு ரயிலின் எஞ்சின் கவிழ்ந்து மற்றொரு தண்டவாளத்தின் மீது விழுந்ததில், அது பயணிகள் ரயில் மீதும் மோதியது. எனினும், பயணிகள் ரயிலில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவித்தனர். இவ்விபத்து சம்பவம் பஞ்சாப் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

;