புதுதில்லி, அக். 11 - உத்தவ் தாக்கரேவுக்கு, இந்திய தேர்தல் ஆணையம், தீபச் சுடர் சின்னத்தை ஒதுக்கியுள்ளது. மகாராஷ்டிராவில், சிவசேனா கட்சி யை உடைத்த பாஜக, அங்கிருந்த உத்தவ் தாக்கரே தலைமையிலான ‘மகா விகாஸ் அகாதி’ கூட்டணி ஆட்சியை கவிழ்த்து விட்டு, ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பொம்மை ஆட்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் உத்தவ் தாக்கரேயிடமிருந்த சிவசேனா கட்சி மற்றும் அதன் வில் அம்பு சின்னத்தையும் ஏக்நாத் ஷிண்டே மூல மாக பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டு, சிவ சேனா கட்சி மற்றும் அதன் சின்னத்தையும் தற்போது முடக்கியுள்ளது. “மகாராஷ்டிராவின் அந்தேரி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு நவம்பர் 3-ஆம் தேதி நடைபெறவிருக்கும் இடைத் தோ்தலுக்கு இருதரப்பும் அவா்களின் கட்சிக்கு புதிய பெயரை தோ்வு செய்ய வேண்டும். அவர்களுக்கு புதிய தோ்தல் சின்னம் ஒதுக்கப்படும். அக்டோபர் 10-ஆம் தேதி பிற்பகல் 1 மணிக்குள் தாங்கள் விரும்பும் பெயா் மற்றும் சின்னம் தொடா்பான விவரங்களை இரு அணி யினரும் சமா்ப்பிக்க வேண்டும்” என்று இந்திய தேர்தல் ஆணையம்உத்தரவிட்டது. அதன்படி, கட்சியின் சின்னமாக திரி சூலம் அல்லது உதய சூரியனை ஒதுக்க வேண்டும். இந்த இரண்டும் இல்லாத பட்சத்தில் தீபம் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரே கோரிக்கை விடுத்திருந்தார். இதன் பின்னணியில், உத்தவ் தாக்கரே வுக்கு “தீபச் சுடர்” சின்னத்தையும், “சிவ சேனா உத்தவ் பாலாசாகேப் தாக்கரே” என்ற கட்சி பெயரையும் இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு பாலாசாகேப் “சிவ சேனா” என்ற கட்சிப் பெயர் ஒதுக்கப் பட்டுள்ளது. ஏக்நாத் ஷிண்டே அரச மரம், கேடயத்து டன் கூடிய வாள், சூரியன் ஆகிய மூன்று சின்னங்களில் ஒன்றை கோரியுள்ளார்.