பனாஜி, பிப்.22- கோவா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கு முன்னதாகவே, வெற்றிபெறும் வாய்ப்புள்ள காங்கிரஸ் வேட்பாளர்களைக் குறிவைத்து, பாஜக, ‘குதிரை பேரத்தை’ ஆரம்பித்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 40 தொகுதிகளைக் கொண்ட கோவா சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 14-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 79 சதவிகிதம் வாக்குகள் பதிவான நிலையில், மார்ச் 10-ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில், கோவா மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கிரிஷ் சோதன்கர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “வாக்குகளை எண்ணி முடிவுகளை அறிவிப்பதற்கு முன்னதாகவே, பாஜக அமைச்சர்கள் எங்கள் கட்சி வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வெற்றிபெறும் வாய்ப்புள்ள வேட்பாளர்களிடம் பாஜக பேரம் பேசி வருகிறது.
பாஜக ஆட்சியை தக்க வைக்க முடியாது என்பதால், தங்களது பழைய பார்முலாவை கையில் எடுத்திருக்கிறது” என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும், “பாஜக-வை பொதுவெளியில் பகிரங்கமாக நாங்கள் எச்சரிக்கிறோம். இப்போதிருப்பது புதிய காங்கிரஸ். எங்களில் ஒருவர் பாஜக பக்கம் தாவப் போவது இல்லை என்பதை அக்கட்சி புரிந்து கொள்ள வேண்டும். வாக்கு எண்ணிக்கைக்கு முன்னரே இத்தகைய குதிரை பேர அரசியலைத் தொடங்கினால் அதற்கு பாஜக சரியான விலைகொடுக்க நேரிடும். கோவா மக்கள் இதை எல்லாம் சகித்து கொண்டிருக்கமாட்டார்கள்” என்றும் கிரிஷ் சோதன்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கோவாவில், கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 17 இடங்களிலும் பாஜக 13 இடங்களிலும் வென்றன. ஆனால், காங்கிரசை உடைத்தும், சுயேச்சைகளை தன்பக்கம் இழுத்தும் பாஜக ஆட்சியமைத்தது. காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் 17 பேர்களில் 16 பேர் கட்சி தாவிய அவலம் கோவாவில் நடந்தது குறிப்பிடத்தக்கது.