புதுதில்லி, டிச. 17 - ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு உரிமைகள் ‘பிரிவு 370’ மற்றும் ‘35ஏ’ ஆகியவற்றின் கீழ், அந்த மாநிலத்தில் பிறந்தவர்கள் மட்டுமே அங்கு நிலம் வாங்க முடி யும் என்ற வரம்பு இருந்தது. ஆனால், இந்த வரம்பு காரணமாக அங்கு தொழிற்சாலைகள் அமைக்க முடியவில்லை மற்றும் சுற்றுலா வளர்ச்சியை ஏற்படுத்த முடிய வில்லை என்று கூறிய ஒன்றிய பாஜக அரசு, கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 அன்று சட்டப் பிரிவு 370 மற்றும் 35ஏ ஆகிய இரண்டையும் நீக்கியது. காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தையும் பறித்து, ஜம்மு - காஷ்மீர், லடாக் என இரண்டு யூனி யன் பிரதேசங்களாக மாற்றியது. நில வருவாய் சட்டத்தையும் திருத்தி யது. இதன்மூலம் யார் வேண்டுமானா லும் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் அனைத்து வகையான நிலங்களையும் வாங்க முடியும் என்ற நிலை உருவானது. இந்நிலையில், கடந்த 2 ஆண்டு களில் “ஜம்மு-காஷ்மீர் பகுதியில் வெளி மாநிலங்களைச் சேர்ந்த எத்தனை பேர் நிலம் வாங்கியுள்ளனர்?” என்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது. இதற்கு ஒன்றிய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் பதிலளித்துள்ளார். அதில், “ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் தரவுகளின்படி தற்போது வரை அங்கு வெளி மாநிலங்களை சேர்ந்த 7 பேர் நிலங்களை வாங்கியுள்ளனர். அவை அனைத்தும் ஜம்மு பகுதியில் மட்டுமே அமைந்துள்ளது” என்று பதிலளித்துள்ளார்.