மக்களவைத் தேர்தல்களுக்கான கடைசிக் கட்ட வாக்குப்பதிவும் நடந்து முடிந்துள்ள சூழ்நிலையில், அரசமைப்புச் சட்டமும் அதனைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியமும் முக்கிய பிரச்சனை களாக மாறி இருக்கின்றன என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை. ‘இந்தியா கூட்டணி’யில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஆரம்பத்திலிருந்தே தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தின் போது அரசமைப்புச்சட்டத்தைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தைப் பிரதானமாக முன்வைத்திருந்தன.
இந்தியா கூட்டணியின் பிரச்சாரம்
கடந்த பத்தாண்டுகளாக எதேச்சாதிகார ஆட்சியின் பல்வேறு கொடுமைகளை அனுபவித்த மக்கள் மத்தியில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மோடி, பாஜக-விற்கு 400 இடங்களுக்கு மேல் வேண்டும் என்று அறைகூவல் விடுத்தது என்பதே‘அரசமைப்புச்சட்டத்திற்கு ஆபத்து’ என்பதை உணர்த்தியது. அரசமைப்புச்சட்டத்தை மாற்றுவதற்கு பாஜக-விற்கு 400 இடங்களுக்கும் மேல் அல்லது பெரிய அளவில் பெரும்பான்மை தேவை என்று பாஜக-வின் பல்வேறு தலைவர்கள் வாதிட்டதன் மூலம் அரசமைப்புச் சட்டம் மாற்றப்படக்கூடும் என்கிற அச்சுறுத்தல் வலுப்பெற்றது. பாஜக-வின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த் குமார், மார்ச் 9ஆம் தேதியே, அரசமைப்புச்சட்டத்தை மாற்றுவதற்கு பாஜக-விற்கு மக்களவையில் 400 இடங்களுக்கும் மேல் தேவை என்று காரணத்தைக் குறிப்பிட்டிருந்தார். இதே போன்ற கருத்துக்களையே லல்லு சிங், ஜோதி மிர்தா, அருண் கோவில் போன்ற பாஜக வேட்பாளர்களும் தெரிவித்தார்கள். இதனால் அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டும் என்கிற ‘இந்தியா கூட்டணியின்’ பிரச்சாரம் மேலும் வலுப்பெற்றது. அதனால் மோடி எதிர்க்கட்சியினரின் பிரச்சாரத்தை மூர்க்கத்தனமாக எதிர்த்தார். முதல் கட்டத் தேர்தல் நடைபெற்ற சமயத்திலேயே அரசமைப்புச்சட்டம் தமது கட்சிக்கான புனித புத்தகம் என்று அறிவித்தார். அரசமைப்புச்சட்டம் எங்கள் அரசாங்கத்திற்கு கீதை, இராமாயணம், மகாபாரதம், பைபிள், குரான் போன்று எங்கள் கட்சிக்கு உள்ளது என்று கூறியதுடன், “பாபா சாகேப் அம்பேத்கர் கூட அதனை மாற்ற முடியாது” என்று கூறும் அளவுக்கும் சென்றார். அரசமைப்புச்சட்டத்தை மாற்றிட காங்கிரஸ் கட்சியும், இந்தியா கூட்டணியும்தான் முயற்சிக்கி ன்றன என்று எதிர்த்தாக்குதலையும் தொடுத்தார். இந்தியா கூட்டணியின் குற்றச்சாட்டு மோடி உள்ளிட்டவர்களை மிகவும் ஆடிப்போகத்தான் செய்திருக்கிறது. எனவேதான் இவ்வாறு எதிர்வினையாற்றி இருக்கிறார்கள்.
மதவெறிச் சாயம் பூச முயற்சித்த மோடி
அரசமைப்புச்சட்டம் மாற்றப்பட்டால் அது தலித், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பின ருக்கான இட ஒதுக்கீட்டையும் ஒழித்துக்கட்டும் என்று கூறப்பட்ட குற்றச்சாட்டும் மோடியை மிகவும் மன உளைச்ச லுக்கு ஆளாக்கிவிட்டது. எனவே இதற்கு மதவெறி சாயத்தைப் பூசி பிரச்சனையைத் திசைதிருப்ப முயன்றார். ‘இந்தியா கூட்டணி’தான் அரசமைப்புச்சட்டத்தை மாற்ற விரும்புவதாகவும், அவ்வாறு மாற்றுவதன் மூலம் தலித், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கான இட ஒதுக்கீடுகளை மதத்தின் அடிப்படை யில் முஸ்லீம்களுக்கு அளித்திட விரும்புவதாகவும் பல தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பேசினார். கர்நாடகா விலும், தெலுங்கானாவிலும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கான வகையினத்தின்கீழ் முஸ்லீம்களுக்கு 4 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டிருப்பதை மோடியும், அமித் ஷாவும் சுட்டிக்காட்டினார்கள். இவ்வாறு இவர்களுடைய பிரச்சாரம் என்பது காங்கிரஸ் கட்சியும், ‘இந்தியா கூட்டணி’யும் இப்போதிருக்கும் இடஒதுக்கீடு களையும் ஒழித்துக்கட்டிவிடுவதோடு, இந்துக்களின் சொத்துக்களையும் முஸ்லீம்களிடம் ஒப்படைத்துவிடு வார்கள் என்கிற ரீதியில் அமைந்திருந்தன.
முஸ்லீம்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அந்தஸ்து அளித்ததை மதத்தின் அடிப்படையிலான இட ஒதுக்கீடு என்று கூறுவது போலித்தனமானதாகும். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இடஒதுக்கீட்டைப் பொறுத்தவரை, அரசமைப்புச்சட்டத்தின் 15(4) மற்றும் 16(4) ஆகிய பிரிவுகள் மதத்தைப்பற்றிப் பொருட்படுத்தாது, பிற்பட்ட நிலைமைக்கான அளவு கோலை அமைத்திருக்கின்றன. பிற்படுத்தப்பட்ட வகுப்பின ருக்கான மாநில ஆணையத்தால் சமூகரீதியாகவும், கல்வி ரீதியாகவும் அடையாளப்படுத்தப்பட்ட முஸ்லீம் மக்கள் குறித்து, அறிவியல்பூர்வமான ஆய்வு மேற்கொண்டதை அடுத்து, பல மாநிலங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான வகைப்படுத்தலில் சேர்க்கப்பட்டனர். உண்மையில், குஜராத்தில் 70 முஸ்லீம் மக்கள் பிரிவினருக்கு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான அந்தஸ்து அளிக்கப்பட்டிருக்கிறது என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏஎன்ஐ ஊடகத்திற்கு அளித்த நேர்காணல் ஒன்றில் மோடியே உரிமை கொண்டாடியிருந்தார். எதார்த்த நிலைமை என்னவெனில் கணிசமான அளவிற்கு மக்கள் பாஜக-விற்கு எதிராக வாக்களித்திருக் கிறார்கள். ஏனெனில் மோடி அரசாங்கம் ஜனநாய கத்திற்கும் அரசமைப்புச் சட்டத்திற்கும் ஓர் அச்சுறுத்தலாக விளங்குகிறது என்று அவர்கள் நம்புகிறார்கள்.
தேர்தல் ஆணையம் மீது சந்தேகம்
பத்தாண்டு கால மோடியின் ஆட்சி, அரசமைப்புச் சட்டத்தின்கீழ் இயங்கி வந்த அனைத்து அமைப்புகளையும் அரித்துப் போகச் செய்திருக்கிறது. தேர்தல் நடைபெற்ற சமயத்தில் தேர்தல் ஆணையம் நடந்துகொண்டுள்ள விதமே, அதனால் தேர்தல் முடிவுகளை நியாயமாகவும் நேர்மையாகவும் அறிவிப்பார்களா என ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது என்கிற பிரதமரின் மதவெறித் தேர்தல் பிரச்சாரத்தை தேர்தல் ஆணையம் கட்டுப்படுத்துவதில் பரிதாபகரமான தோல்வி, வாக்குப்பதிவு விவரங்களை உடனுக்குடன் அறிவிப்பதில் தயக்கம், இந்த விஷயம் உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற பிறகு மட்டுமே அவ்வாறு விவரங்களைத் தெரிவித்தது, தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்துவதில் பொதுவாக தோல்வி அடைந்திருப்பது ஆகிய அனைத்தும் இந்த சந்தேகங்களை ஏற்படுத்தி இருக்கின்றன.
விதிமீறல்
இறுதிக்கட்ட வாக்குப்பதிவுக்கு சில நாட்களுக்கு முன்பு, மே 31 அன்று ஓய்வு பெறவிருந்த ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டேவுக்கு அரசாங்கம் ஒரு மாத கால நீட்டிப்பு வழங்கியுள்ளது. இது, முன்னெப்போது மில்லாத ஒரு நடவடிக்கையாகும். (1975இல் ஒரு முறை அளித்ததைத் தவிர,) எந்தவொரு ராணுவ அதிகாரிக்கும் கால நீட்டிப்பு வழங்கப்பட்டதில்லை. புதிய ராணுவ தளபதி நியமனம் ஓய்வு பெறுவதற்கு முன்பு அறிவிக்கப்படாவிட்டால், அதுவரை செயல் தலைவர் நியமிக்கப்படுவார். இந்நிலையில், புதிய தளபதி புதிய அரசால் நியமிக்கப்படுவார். ஆனால் நீடடிப்பு ஏன் செய்யப்பட்டது என்பதற்கு எந்த விளக்கமும் இல்லை. மேலும் இந்த நீட்டிப்புக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியதா என்பதும் தெளிவாக இல்லை. இது தேர்தலுக்குப் பிந்தைய சூழ்நிலை குறித்த அனைத்து வகையான ஊகங்களுக்கும் வழிவகுத்துள்ளது. இறுதியாக, நரேந்திர மோடியே அரசமைப்புச் சட்டத்தின் மீதான தனது நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கியுள்ளார். நாட்டிற்கும் மக்களுக்கும் சேவை செய்ய தன்னை அனுப்பி யவர் ‘பரமாத்மா’ என்று தான் உறுதியாக நம்புவதாக தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி கட்டத்தில் விசித்திரமான கூற்றை முன்வைத்துள்ளார். கடவுளைத் தவிர தான் யாருக்கும் பதில் சொல்லப் போவதில்லை என்று தெளிவுபடுத்தி யுள்ளார். தற்போது இறுதிக்கட்ட வாக்குப்பதிவின் போது கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் 48 மணி நேரம் தியானத்தில் ஈடுபட்டுள்ளார். அவரது எதிர்கால நடவடிக்கைகள் அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதா அல்லது தெய்வீக நியதிக்கு உட்பட்டதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மே 29, 2024
- தமிழில்: ச.வீரமணி