ஜூலை பத்தாம் நாள் அதிகாலை இரண்டு மணி. அணிவகுப்பு மைதானத்தில் மரங்களின் நிழல்கள் நிலவொளியில் அழகாகக் காட்சியளித்தன. அந்த அமைதியைக் கிழித்துக் கொண்டு திடீரென்று துப்பாக்கிகள் முழங்கின. ஒரே நேரத்தில் ஐரோப்பியர் குடியிருப்பு, வெள்ளைக்காரக் காவலர்கள், அதிகாரிகள் வசிப்பிடம் என்று அனைத்தையும் இந்திய வீரர்கள் தாக்கினர். கோடைகாலம் என்பதால் ஜன்னல்கள் திறந்து வைக்கப்பட்டிருந்தன. அதுவே தாக்குதலுக்கு எளிதாக வழியேற்படுத்திக் கொடுத்தது. படுக்கையில் ஆடைகளின்றி, பாதுகாப்பின்றி படுத்திருந்த ஐரோப்பியர்களை ஜன்னல் வழியாக கிளர்ச்சியாளர்களால் எளிதாகச் சுட முடிந்தது.
லேன்ஸ்நாயக் ஒருவர் அதிகாரிகள் வசித்த இடங்களுக்குத் தீ வைத்தார். வீட்டை விட்டு வெளியேறும் அதிகாரிகளை சுட்டுக் கொல்வதற்கென்று தனித்தனியாக படையினர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். இன்னொரு பகுதியினர் வெடிமருந்துகளும், இராணுவத் தளவாடங்களும் இருந்த அறையைக் கையகப்படுத்தி வீர்ர்களின் வசம் அளித்தனர். கர்னல் ஃபேன்கோர்ட் அவருடைய மனைவியின் முன்னிலையிலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். கர்னல் மக்கராஸ் இரண்டாவதாகப் பலியானார். சிறிது நேரத்தில் பதினான்கு ஆங்கிலேய அதிகாரிகளும், தொன்னூற்றி ஒன்பது வீரர்களும் மடிந்தனர். அதிகாரிகள், வீரர்கள் என்று பலரும் படுகாயமடைந்தனர். கோட்டைக்குள் வசித்த திப்புவின் மூன்றாம் மகன் மொய்தீன் கிளர்ச்சியாளர்களுக்கு மைசூர் கொடியை கொடுத்தான். கோட்டையின் மீது அவர்கள் மைசூர் கொடியை ஏற்றினர். வட இந்தியாவில் கான்பூர், லக்னோ, ஆக்ரா, டில்லி ஆகிய இடங்களில் 1857ஆம் ஆண்டு உருவான சிப்பாய்களின் எழுச்சியே இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் என்று வரலாற்றில் பெரும்பாலும் குறிப்பிடப்படுகிறது. ஆனால் இப்புரட்சிக்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னதாகவே 1806ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் வேலூர் கோட்டையில் வெள்ளையர்களின் ஆட்சிக்கு எதிரான வீரஞ்செறிந்த போர் தான் மேலே வர்ணிக்கப்பட்டுள்ளது. அந்த நிகழ்வு வேலூர்ப் படுகொலை, வேலூர் கலகம், வேலூர் எழுச்சி, வேலூர் கிளர்ச்சி, வேலூர்ப் புரட்சி என வரலாற்று அறிஞர்களால் பலவாறு வர்ணிக்கப்பட்டுள்ளது. அந்தப் போரில் நூற்றுக்கணக்கான இந்திய வீரர்கள் இன்னுயிர் ஈந்தனர்.
இன்று (ஜூலை 10) வேலூர் புரட்சியில் இந்திய வீரர்கள் இன்னுயிர் ஈந்த தினம்