states

மோடியின் சுற்றுப் பயணத்திற்காக குஜராத் தேர்தல் தேதி தள்ளிவைப்பு?

புதுதில்லி, அக். 14 - இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவையின் பதவிக் காலம் 2023 ஜனவரி 8-ஆம் தேதியுட னும், குஜராத் சட்டப்பேரவையின் பதவிக் காலம் 2023 பிப்ரவரி 18-ந் தேதியுடன் முடிவடைகிறது. எனினும், இவ்விருமாநிலங்களுக்கும் டிசம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்பதால், இமாச்சலப் பிரதேசம்,  குஜராத் மாநிலங்களுக்கான சட்டப்பேர வைத் தேர்தல் தேதி அக்டோபர்  14ஆம் தேதி வெளியாகும் என்று  தகவல்கள்  வெளியாகின. வாக்குப்பதிவு வெவ்வேறு தேதிகளில் இருந்தாலும் தேர்தல் அறிவிப்பு ஒன்றாகவே வெளியாகும் என்று அந்த தகவல்கள் தெரிவித்தன. ஆனால், இந்தியத் தேர்தல் ஆணையம்,  இமாச்சலப் பிரதேசத்திற்கு மட்டும் தேர்தல் தேதியை அறிவித்து விட்டு, குஜராத்திற்கான தேர்தல் தேதியை அறிவிக்காமல்விட்டுள்ளது.  குஜராத் தேர்தல் தேதி அறிவிக்கப்படாதது குறித்த கேள்விக்கு, “இமாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிவடை யும் தேதியில் இருந்து 40 நாட்கள் கழித்தே குஜராத் சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடி வடைவதால் இரு மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களையும் தனித்தனியே நடத்துவதில் விதிப்படி தவறில்லை” என தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். ஆனால், பிரதமர் மோடியின் குஜராத் சுற்றுப்பயணத்திற்காகவே தேர்தல் தேதி அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சந்தேகங்கள் எழுந்துள்ளன.

தேர்தலையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி துவங்கி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் ஏற்கெனவே குஜராத்தில் பலகட்ட சுற்றுப்பயணத்தை முடித்து விட்டனர். பிரதமர் மோடி கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட, குஜராத்திற்கு சென்று பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிவிட்டு வந்தார். அப்போதே அக்டோபர் 19-ஆம் தேதி பிரதமர் மோடி மீண்டும் குஜராத் செல்வார் என தகவல்கள் வெளியாகின. அதற்கு முன்னதாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டால், பிரதமர் மோடியால் எந்த திட்டத்தையும் அடிக்கல் நாட்டவோ தொடங்கி வைக்கவோ முடியாது என்று கூறப்பட்டது. இந்நிலையில், இமாச்சலப் பிரதேசத்திற்கு அறிவித்து விட்டு, குஜராத்திற்கு மட்டும் தேர்தல் தேதிகளை அறிவிக்காதது, பிரதமர்  மோடியின் சுற்றுப்பயணத்திற்காக தேர்தல்  ஆணையம் காத்திருக்கிறது என்ற சந்தேகத்தையே வலுப்படுத்தியுள்ளது.