டேராடூன், மே 6 - உத்தரகண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டம் தடியால் கிராமத்தைச் சேர்ந்தவர் தர்ஷன் லால். தலித் வகுப்பைச் சேர்ந்தவர். இவரது மகன் விக்ரம் குமார் (27). இவர் இமாசல பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி செய்து வருகிறார். இந்நிலையில் விக்ரம் குமாருக்கு அண்மையில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட நிலையில், வியாழனன்று தடியால் கிரா மத்தில் விக்ரம் குமார் குதிரையில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டுள்ளார். அப்போது அந்த கிராமத்தின் 5 பெண்கள் உள்ளிட்ட சாதிவெறியர்கள், ஊர்வலத்தை வழிமறித்துள்ளனர். “குதிரையில் இருந்து இறங்காவிட்டால் எரித்துக் கொலை செய்துவிடுவோம்” என மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து மணமகன் விக்ரம் குமாரின் தந்தை தர்ஷன் லால் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய மாவட்ட ஆட்சியர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் ஆணைய அதிகாரிகள், 5 பெண்கள் உள்பட 6 பேர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 506 (மிரட்டல்), 504 (வேண்டுமென்று அவமதித்தல்) மற்றும் எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.