states

img

நவம்பர் 26 அகில இந்திய வேலை நிறுத்தம் மகத்தான வெற்றி - அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம்

மத்தியத் தொழிற்சங்கங்கள் அறிவித்த அகில இந்திய வேலை நிறத்தம் மகத்தான வெற்றி பெற்றுள்ளது. இதனை மகத்தான முறையில் வெற்றி பெறச்செய்திட்ட தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் அனைவருக்கும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் தன் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளது. தொழிலாளர்கள் நகர்ப்புறங்களில் வேலை நிறுத்தத்தை மகத்தான முறையில் வெற்றி பெறச் செய்திட்ட அதே சமயத்தில் விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் கிராமப்புறங்களில் வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக்கியிருக்கிறார்கள். அதே சமயத்தில் பேரணிக்கு வரும் விவசாயிகள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டிருப்பதற்குக் கண்டனமும் தெரிவித்திருக்கிறது.

இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் ஏ.விஜயராகவன் மற்றும் பொதுச் செயலாளர் வெங்கட் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

வேலைநிறுத்த்த்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கம் ஆகியவற்றின் தலைவர்களைக் கைது செய்துள்ள பாஜக தலைமையிலான மத்திய அரசாங்கத்தின் ஜனநாயக விரோத அணுகுமுறையை அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் கண்டிக்கிறது. கடந்த மூன்று நாட்களாக நூற்றுக்கும் மேற்பட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். காவல்துறையினர் அநேகமாக அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளையும் அடைத்துவிட்டனர்.  தில்லிப் பேரணிக்கு விவசாயிகள் வரமுடியாதவிதத்தில் கடுமையான முறையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். ஹரியான அரசாங்கம் தங்கள் எல்லைகளைக் கடந்து தில்லி செல்வதற்கு எந்த விவசாயியையும் அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்திருக்கிறது. இது நாட்டின் கூட்டாட்சித்தத்துவத்திற்கு எதிரானது.  எந்தவொரு மாநில அரசும் குடிமக்கள் மாநிலங்களுக்கிடையே பயணம் செய்வதைத் தடுத்திட முடியாது.  

பேரணியாக வந்துகொண்டிருக்கும் விவசாயிகள்மீது கண்மூடித்தனமான முறையில் கண்ணீர்புகைக் குண்டுகளும், நீர்பீய்ச்சி அடிக்கும் வாட்டர்கேன்களும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இவற்றின் விளைவாக எண்ணற்ற விவசாயிகள் காயங்கள் அடைந்திருக்கிறார்கள்.  இவ்வாறு மத்திய அரசும், பல மாநில அரசுகளும் அவர்களின் காவல்துறையும் போராட்டத்தை முடக்க முயற்சிகள் மேற்கொண்டபோதிலும் அவற்றையெல்லாம் மீறி ஆயிரக்கணக்கான விவசாயிகள் தில்லியை நோக்கி அணிதிரண்டு வந்திருக்கிறார்கள். பலர் ஆங்காங்கே தேசிய நெடுஞ்சாலைகளில் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

இவ்வாறான அரசின் செய்கைகளை ஒரு ஜனநாயக நாட்டில் சகித்துக்கொள்ள முடியாது.  அமைதியானமுறையில் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்திடும் உரிமை காவல்துறையினரால் பறிக்கப்பட்டிருக்கிறது. பாஜக அரசாங்கம் பல இடங்களில் ஆயுதப்படையினரையும் பயன்படுத்தி இருக்கிறது. இவற்றுக்கெதிராகவும், தொழிலாளர் விரோத விவசாயிகள் விரோத சட்டங்களுக்கு எதிராகவும் எங்கள் சங்கத்தின் சார்பில் நவம்பர் 27 அன்று மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு இவற்றைக் கண்டித்து கிளர்ச்சிப் போராட்டம் நடத்தப்படும்.   

இவ்வாறு விஜயராகவனும், வெங்கட்டும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.

;